வாசிப்பும், யோசிப்பும்130: விமர்சகர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்!; மீண்டும் வெளிவரவிருக்கும் ‘ழ’கரம்!;…

1. விமர்சகர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்!

-V.N.Giritharan -நாம் அன்றாடம் வாசிக்கும் சஞ்சிகைகள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், மேலும் ஏனைய வெகுசன ஊடகங்கள் பலவற்றில் பல்வேறு வகையினரான விமர்சகர்களின் எழுத்துகளை வாசித்திருப்போம் அல்லது அவர்தம் உரைகளைக்கேட்டிருப்போம். அப்பொழுதெல்லாம் பலருக்கும் ஆச்சரியமாகத் தென்படும் விடயம் படைப்பொன்றினைப்பற்றி எவ்விதம் இவ்விதம் பல்வகை விமர்சனங்கள் வெளியாகின்றன என்பதுதான். அதற்கு முக்கிய காரணங்களில் சில:

விமர்சகர்கர்களின் இலக்கியப்புலமைக்கேற்ப அவர்களது விமர்சனங்களும் வேறுபட்டிருக்கும்.  சிலரது விமர்சனங்கள் தாம் சார்ந்த சமூக, அரசியல் , கலை, இலக்கியக்கொள்கைகளுக்கேற்ப மாறுபட்டிருக்கும். கலை மக்களுக்காக, கலை கலைக்காக என்று வாதிடுபவர்களின் விமர்சனங்களும் அக்கொள்கைகளுக்கேற்ப வேறுபட்டிருக்கும். விமர்சனங்கள் எவ்வகைப்பட்டதாகவுமிருந்தாலும், அவ்விமர்சனங்களின் தரம், முக்கியத்துவம் , அவை எவ்விதம் தாம் விமர்சிக்கும் படைப்புகளை உள்வாங்கி, தர்க்கச்சிறப்புடன் ஆராய்கின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. உதாரணமாக மார்க்சிய அடிப்படையில் விமர்சிக்கும் ஒருவர் , மார்க்சியத்தின் கலை, இலக்கியச்சிந்தனைகளுக்கேற்ப, குதர்க்கமற்று, தர்க்கச்சிறப்புடன் விமர்சிக்கும் படைப்பினை விமர்சித்திருந்தால் அவ்விமர்சனம் நல்லதொரு விமர்சனமே.

அதுபோல் கலை கலைக்காக என்னும் அடிப்படையில் அவ்விமர்சனத்தை குதர்க்கமற்று, தர்க்கச்சிறப்புடன் விமர்சித்திருந்தால் அதுவும் தரமான விமர்சனமே. இப்பொழுது பலருக்கு ஒரு கேள்வி எழலாம். அதெப்படி இருவகையான போக்குள்ளவர்களின் இருவேறு வகைப்பட்ட விமர்சனங்களும் தரமானவை என்று கூறுகின்றீர்களே என்ற கேள்விதானது. என்னைப்பொறுத்தவரையில் விமர்சனமானது எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்க வேண்டிய தேவையில்லை. ஒரு படைப்பினை அணுகும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமானவர்கள். அவர்களது அறிவு, வாசிப்பு அனுபவம், கல்வி என்று பல்வேறு காரணங்களினால் அவர்களது விமர்சனங்களும் வேறுபடும். ஆனால் விமர்சனங்கள் வேறு பட்டாலும், அவ்விமர்சனங்கள் விமர்சிக்கப்படுபவர்களால் படைப்புகள் முழுமையாக உள்வாங்கப்பட்டு, அவர்களது சிந்தனைகளுக்கேற்ப புரிந்துகொள்ளப்படுவதன் விளைவான வெளிப்பாடுகளாக இருப்பின், அவை தரமான விமர்சனங்களே என்பதென் கருத்து.

Continue Reading →