சிறுகதை: பிறழ்வு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய முற்பட்டதில்லை.

அங்கு நிர்மாணிக்கப்படும் அந்தப் பெரிய கட்டடத்தொகுதியை ஒட்டியே அவளது குடிமனை இருந்தது. கட்டுமானத்திற் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மதியச் சாப்பாட்டிற்காக அங்குதான் வருவார்கள். அவள் முகம் சுளிக்காது எல்லோருக்கும் சமைத்துப் போடுவாள். மதியச் சாப்பாடு மட்டும்தான் அவள் தருகிறாளா அல்லது இரவுப் போசனமும் கொள்ளமுடியுமா என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை. அதை அவள்; ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறாளா அல்லது தன் ஜீவனோபாயத்திற்காகவா என்பதும் தெளிவில்லாமலிருந்தது. அதுபற்றி யாரும் அலட்டிக்கொண்டதில்லை. சாப்பாடு கிடைக்கிறது.. அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?

அந்தக் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கின என்று தெரியவில்லை. அது இனி எப்போது முடிவுறும்; என்பதையும் ஊகிக்கமுடியாதிருந்தது. அங்கு எண்ணற்ற தொகையினர் பணி புரிந்தார்கள். சிலரது பணிக்காலம் முடிந்து விலகிப் போவதும், புதியவர்கள் வந்து சேர்வதும் நடைமுறையிலிருந்தது. வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே சிலர் இறந்தும்போயிருக்கிறார்கள். இறப்பதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? விபத்துக்கள் நேரலாம்.. அல்லது கொல்லப்படலாம்.. அதெல்லாம் சகஜமான சங்கதிதானே?

அங்கு இளைஞனொருவன் புதிதாக வந்து சேர்ந்தான். மேற்பார்வையாளனாகவோ பொறியியலாளனாகவோ ஒரு பதவிக்கு நியமனம் பெற்று வந்திருந்தான். பெரிய பதவிக்கு வந்தவன் உயர்மட்ட செல்வாக்கு உள்ளவனாகத்தானிருப்பான் என ஏனையவர்கள் கருதினார்கள். அதனால் அவனுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்வதற்குத் தங்களுக்குள் போட்டி போட்டார்கள். தன்னை யாரென்று அறியாத அவர்களது செய்கை அவனுக்கு அவர்கள்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.

Continue Reading →

மன்னார் அமுதனின் “அன்னயாவினும்” – காட்சி விரிக்கும் கவிதைகள்!

மன்னார் அமுதனின் “அன்னயாவினும்” - காட்சி விரிக்கும் கவிதைகள்!மன்னார் அமுதனின் ‘அக்குறோணி’ கவிதைத் தொகுதிக்கு நயவுரை வழங்கியோரில் நானும் ஒருவன். அதன் பின்னர் அமுதனின் இந்தக் கவிதைத் தொகுதி உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. அக்குறோணி கவிதைகளின் போக்கிலிருந்து வித்தியாசப்பட்ட கவிதை சொல்லும் வகையில் இக்கவிதையில் அமைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

‘அன்னயாவினும்’ தொகுதியின் ஒரு சில கவிதைகளை மன்னார் அமுதன் அவ்வப்போது முகநூலில் இட்டு வந்த போது படித்திருக்கிறேன், அவரைப் பாராட்டியிருக்கிறேன்.

கவிதையை முழுமையாகத் தருவதில் அமுதன் முழுமையடைந்திருக்கிறார் எனச் சொல்வதில் எனக்குள் குழப்பங்கள் கிடையாது. ஒரு கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எந்தப் பாணியை விரும்புகிறதோ எந்த வார்த்தைகளை விரும்புகிறதோ எந்தச் சொற்களை விரும்புகிறதோ அவை அத்தனையையும் கொண்டதாக அமைவதே முழுமையான கவிதை. இந்த வகையில் ஒரு நல்ல கவிஞனாக அமுதன் முழுமையடைந்து விட்டார் என்று சொல்வேன்.

இந்த முழுமை அவரது வாசிப்பாலும் வயதினாலும் உணர்வினாலும் அனுபவத்தினாலும் மாத்திரம் வந்திருக்கிறது என்பதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கும் மேலாக கவிதை என்பது என்ன என்ற நிறைவான சிந்தனையும் உணர்வும் புரிதலும்தான் அந்த முழுமைக்குக் காரணம் என்று சொல்ல முடியும்.

தன்னைப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் எவ்வாறு முழுமை பெறுவதில்லையோ அப்படியேதான் கவிதை என்ற கலை வடிவமும். எல்லாக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும். ஒரு கலை வடிவம் அதன் நேர்த்தியால், வடிவத்தால் அழகும் பொலிவும் பெறுகிறது. அந்த நேர்த்தியையும் அழகையும் கவிதையில் கொண்டு வருவதற்கு கவிதை என்றால் என்ன என்ற ஆழ் உணர்வும் ரசனையும் கவிஞனுக்கு இருக்க வேண்டும். அது மன்னார் அமுதனுக்கு இருக்கிறது.

இந்தத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது எந்தக் கவிதையில் ஆரம்பித்துப் பேசுவது என்கிற பெரிய சவாலைத்தான் நான் எதிர் கொண்டேன். அவ்வப்போது நான்கு கவிதைகளைப் படிப்பதும் மூடிவைப்பதுமாகக் காலத்தைக் கடத்தியபடியே இருந்தேன்.

இந்தக் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையை, அதன் போக்கை, அதன் சவால்களை, அதன் ஆபத்துக்களைத்தான் மொத்தமாகப் பேசுகின்றன. ஆனால் எந்தவொரு பக்கத்துக்கும் சாராமல், வலிந்து இழுக்காமல் , மனம் போன போக்கில் போகாமல் ஒரே நேர் கோட்டில் இவை பயணம் செய்கின்றன. ஒரு இலங்கையனாக, ஒரு சிறுபான்மையினனாக, ஒரு தமிழனாக, ஒரு இலக்கியவாதியாக, ஒரு வடபுலத்தானாகவெல்லாம் இக் கவிதைகளில் தோற்றம் தருகிறார் அமுதன். ஆனால் எந்தப் பக்கமும் தூக்கலாகப் பேசப்படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஓர் அம்சம்தான்.

Continue Reading →