வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் – வன்னிவிளாங்குளம் வீதியானது, வவுனியா – மன்னார் – முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பயணிக்கக்கூடிய மிகவும் முக்கியமான போக்குவரத்து வீதியாகும். வன்னித்தொகுதி என்று அழைக்கப்படும் இம்மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் இத்தரைவழிப்பாதையின் மையப்புள்ளியாக பூவரசங்குளம் எனும் கிராமம் அமையப்பெற்றுள்ளது. செழிப்பு மிகுந்த வனாந்தரக் காடுகளை ஊடறுத்துச் செல்லும் பூவரசங்குளம் – வன்னிவிளாங்குளம் வீதியை அண்டிய காட்டுப்பகுதிகளிலும், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளிலும் சட்டவிரோத தனிமனித காடழிப்பு நடவடிக்கைகள் பொலிஸாரின் ஒத்துழைப்போடு அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றன. பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை, கருங்காலி மரங்கள் இக்காட்டுப்பகுதிகளிலிருந்து ஒவ்வொரு இரவும் பொலிஸாரின் பாதுகாப்போடு மூன்று மாவட்டங்களுக்கும் எண்ணிக்கை கணக்கின்றி விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
இது தொடர்பில் கந்தன்குளம் கிராம பொதுஅமைப்பு ஒன்றின் பிரதிநிதி தகவல் தருகையில், பூவரசங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள அனைத்து கிராமங்களின் மக்களுக்கும் நன்கு பரிச்சயமான ‘வீரப்பன், காட்டு ராசா, காட்டு அரசன்’ என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்படும் ஒரு சில நபர்களே, காடழிப்பை ஒரு தொழிலாக (பிசினஸ்) செய்து வருவதாகவும், அவர்களிடம் பணம் மற்றும் குடி வகைகள், போதைப்பொருள்களை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு பொஸிஸார் இவ்வாறான சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த நபர்கள் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தாம் ஒரு சமுக அக்கறையோடு பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தால்… பொலிஸார் அடுத்த நிமிசமே, காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் அந்த நபர்களுக்கு போன் பண்ணி, ‘இன்ன நம்பரில இருந்து, இன்னாள் உங்களப்பத்தி முறைப்பாடு செய்யது. பார்த்து செய்யுங்க. கவனம். ஆளையும் கவனிச்சு வையுங்க’ என்று அறிவுறுத்துவதாகவும், காட்டிக்கொடுப்பதாகவும் குறைபட்டுக்கொண்டார்.