‘மரபு’, ‘மரபியல்’ என்பதற்கு ‘முறைமை, இயல்பு, பெருமை, நியாயம், வழிபாடு, நல்லொழுக்கம், வழக்கம், வாடிக்கை, பழக்கம், சட்ட மதிப்புடைய வழக்கம், செயல் வழக்காறு, அடிப்பட்ட வழக்காறு, கர்ண பரம்பரை, nவிவழி மரபுரை, வழிவழிச் செய்தி, வாய்மொழிக் கட்டளைமரபு, மரபுத் தொகுதி, மரபுரை வகுப்பு, தலைமுறைத் தத்துவம், ஐதிகம், பரம்பரை வழக்கங்கள், முன்னோர் சொல்வழக்கு, தொல்காப்பிய இலக்கணப் பகுதி ஆகிய சொற்பதங்களை அகராதி கருத்துரையாகக் கூறுவதைக் காண்கின்றோம்.
தமிழ் இலக்கியங்களில் காலத்தால் மூத்த தொல்காப்பியம் எனும் பெருநூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்துள்ளார். அதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களில் ஒருமித்து ஆயிரத்து அறுநூற்றிரண்டு (1,602) சூத்திரங்கள் உள்ளன. இனி, பொருளதிகாரத்தில் உயிரினம் சார்ந்த மரபியல் பற்றிக் கூறப்படுவதைச் சற்று விரிவுபடுத்திப் பார்ப்போம்.
1. இளமைப் பெயர்கள்
பார்ப்பும் (பறவைக் குஞ்சு), பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் என்னும் ஒன்பதும் இளமை குறிக்கும் சிறப்பினையுடைய மரபிலக்கணப் பெயர்களாகும். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்திற் காண்போம்.
‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பில்
பார்ப்பும் பறழுங் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று
ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே.’ ….. (545)
Continue Reading →