சூழலைக் கெடுக்கும் 3 இலட்சம் டன் பட்டாசுப்புகை! 7 இலட்சம் பேரைக் காவு வாங்கும் காற்று மாசுபாடு! இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாட்களில் பட்டாசுகளால் 3 இலட்சம் டன் பட்டாசுப் புகை, அதாவது 300 கோடி கிலோ பட்டாசுப் புகை காற்றில் கலக்கிறது. இதனால் புகையாகப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? ஏறத்தாழ 8000 கோடி ரூபாய். இந்தப் பணத்தைக் கொண்டு 60 கல்லூரிகள் கட்டலாம். 1200 பள்ளிக்கூடங்களைக் கட்டலாம். பட்டாசு விபத்துக்களால் ஒவ்வோர் ஆண்டு சராசரியாக 400 பேர் மரணமடை கின்றனர். 1,15,000 பேர் படுகாயமடைகின்றனர்.
தீபாவளிப் பட்டாசுகளில் வண்ணங்களை உருவாக்கவும், சத்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத் தன்மை கொண்ட நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன:
சுவாசப் பாதையில் எரிச்சல், ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், உலோகப் புகை காய்ச்சல், உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு, ஈரப்பதம் காற்றுடன் வினைபுரிந்து தோல் பாதிப்புகள், குமட்டல், வாந்தி, மூளை வளர்ச்சி பாதிப்பு, கோமா நிலை.
குழந்தைகளுக்கு நுரையீரல்நோய்கள், மூச்சிளைப்பு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் கோளாறுகள், சுவாசக்கோளாறுகள். நோய் எதிர்ப்புத்திறன் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும். தீபாவளிக் காலங்களில் இவ்வித நோய்கள் 40% அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கடந்த ஒருசில ஆண்டுகளில் இவ்வகைக் காற்று மாசுபாட்டால் உண்டான நோய்களால் இந்தியாவில் 7 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
மனிதனின் காதுகள் தாங்கக்கூடிய ஒலி அளவு 30 டெசிபல் மட்டுமே. ஆனால் தீபாவளி பட்டாசுகளில் மிக எளியதான குழந்தைகள் கையில் துப்பாக்கி மூலம் வெடிக்கும் கேப், பொட்டு வெடியே 70 டெசிபல் ஒலியை எழுப்பும் தன்மை கொண்டது.