(நோர்வேயில் வதியும் ஈழத்தமிழரான திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் என்பாரின் பதிப்பு முயற்சியில் 2014இல் வெளிவந்ததான வன்னி வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பிலான பெருந் தொகுப்பில் (675 பக்கங்கள்) இடம்பெற்ற கட்டுரை. எழுதியனுப்பிய நாள் 29-03-2014)
தோற்றுவாய்
ஈழத்திலே தமிழர் பெருந்தொகையினராக வாழும் நிலப்பரப்புகளிலொன்றாகத் திகழ்வது வன்னிப் பிரதேசம் ஆகும். இப்பிரதேசமானது பண்டைக்காலம் முதலே தமிழரின் கலைகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைச் சிறப்புற வளர்த்துவந்துள்ளது. இன்றும் வளர்த்துவருகின்றது. ஈழத்தின் ஒட்டுமொத்த தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலே வன்னிப்பிரதேசத்திற்;கு ஒரு தனி இடம் உளது என்பது அழுத்திப் பேசப்படவேண்டிய முக்கிய அம்சமாகும். இவ்வகையில் இம்மண்ணின் இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுப் பார்வையானது தனியாக ஒருநூலாக விரிவுபெறக்கூடிய பொருட்பரப்புடையதாகும். இத்தொகுப்புநூலின் இடச்சுருக்கம் கருதி பண்டைய இலக்கியங்களின் தோற்றம் தொடர்ச்சி என்பன தொடர்பான மிக முக்கிய செய்திகளை மையப்படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டுமே எனது இக் கட்டுரை முயற்சி அமைகிறது.1
1. வன்னி என்ற நிலப்பரப்பும் அதன் இலக்கிய வளமும்
வன்னிப் பிரதேசம் என்று இன்று நாம் குறிப்பிடும் நிலப்பரப்பானது, வடக்கில் யாழ்ப்பாணக் கடலேரியையும் தெற்கில் வடமத்திய மாகாணப்பகுதி மற்றம் அருவியாறு ஆகியவற்றையும் கிழக்கிலும் மேற்கிலும் முறையே திருக்கோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டதாகும். ஏறத்தாழ 2000சதுரமைல் பரப்பளவுடையதான இந்நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்றைய ‘வன்னி’ மற்றும் ‘முல்லை’ மாவட்டங்களுள் அடங்கியதாகும்.
ஆயினும், கடந்தசில நூற்றாண்டுகளுக்கு முன்வரை-குறிப்பாக 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதிகளில்- ‘வன்னி’ என்ற அடையாளச் சுட்டானது மேற்சுட்டிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து பரந்ததாக அமைந்திருந்தது என்பது இங்கு நினைவிற் கொள்ளப்படவேண்டியதாகிறது. குறிப்பாக மன்னார் மற்றம் திருக்கோணமலை மாவட்டப் பகுதிகளையும் உள்ளடக்கி , தெற்கே புத்தளம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவங்கள் வரை விரிந்து பரந்த நிலப்பரப்புகளும் ‘வன்னி’ என்ற அடையாளம் அக்காலப்பகுதிகளில் பெற்றிருந்தன. வன்னிபம் அல்லது வன்னிமை எனப் பெயர்தாங்கிய குறுநில ஆட்சியாளர்களின் ஆட்சிப்பிரதேசங்களாக இந்நிலப்பரப்புகள் திகழ்ந்துவந்துள்ளன. எனவே ஈழத்தின் வன்னிப் பிரதேசமானது பண்டைய நிலையில் பரந்து விரிந்ததாகத் திகழ்ந்தது என்பதையும் நாளடைவில் அதன் எல்லைகள் சுருங்கிவந்துள்ளன என்பதையும் இங்கு கருத்துட்கொள்வது அவசியமாகும்.