அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய முற்பட்டதில்லை.
அங்கு நிர்மாணிக்கப்படும் அந்தப் பெரிய கட்டடத்தொகுதியை ஒட்டியே அவளது குடிமனை இருந்தது. கட்டுமானத்திற் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மதியச் சாப்பாட்டிற்காக அங்குதான் வருவார்கள். அவள் முகம் சுளிக்காது எல்லோருக்கும் சமைத்துப் போடுவாள். மதியச் சாப்பாடு மட்டும்தான் அவள் தருகிறாளா அல்லது இரவுப் போசனமும் கொள்ளமுடியுமா என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை. அதை அவள்; ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறாளா அல்லது தன் ஜீவனோபாயத்திற்காகவா என்பதும் தெளிவில்லாமலிருந்தது. அதுபற்றி யாரும் அலட்டிக்கொண்டதில்லை. சாப்பாடு கிடைக்கிறது.. அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?
அந்தக் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கின என்று தெரியவில்லை. அது இனி எப்போது முடிவுறும்; என்பதையும் ஊகிக்கமுடியாதிருந்தது. அங்கு எண்ணற்ற தொகையினர் பணி புரிந்தார்கள். சிலரது பணிக்காலம் முடிந்து விலகிப் போவதும், புதியவர்கள் வந்து சேர்வதும் நடைமுறையிலிருந்தது. வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே சிலர் இறந்தும்போயிருக்கிறார்கள். இறப்பதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? விபத்துக்கள் நேரலாம்.. அல்லது கொல்லப்படலாம்.. அதெல்லாம் சகஜமான சங்கதிதானே?
அங்கு இளைஞனொருவன் புதிதாக வந்து சேர்ந்தான். மேற்பார்வையாளனாகவோ பொறியியலாளனாகவோ ஒரு பதவிக்கு நியமனம் பெற்று வந்திருந்தான். பெரிய பதவிக்கு வந்தவன் உயர்மட்ட செல்வாக்கு உள்ளவனாகத்தானிருப்பான் என ஏனையவர்கள் கருதினார்கள். அதனால் அவனுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்வதற்குத் தங்களுக்குள் போட்டி போட்டார்கள். தன்னை யாரென்று அறியாத அவர்களது செய்கை அவனுக்கு அவர்கள்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.