தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2015இல் வெளிவரவுள்ள எனது ‘குடிவரவாளன்’ நாவலில் மொத்தம் 27 அத்தியாயங்கள். ‘இன்று புதிதாய்ப்பிறந்தேன்’ என்று முதலாவது அத்தியாயத்தில் ஆரம்பமாகும் நாவல் இறுதி அத்தியாயமான அத்தியாயம் 27இல் ‘இன்று புதிதாய்ப்பிறந்தேன்’ என்று முடிவடையும்.
இந்நாவல் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அகதிகள், சட்டவிரோதக்குடிவரவாளர்கள் பற்றி அமெரிக்காவில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் பற்றி இந்நாவல் கேள்வியினை எழுப்புகின்றது. இவ்விதமாக அமெரிக்க மண்ணில் தம் இருப்பிற்காய்ப் போராடும் குடிவரவாளர்கள் எவ்விதம் அங்கு அவர்கள் நிலை காரணமாகப் பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை இந்நாவல் விபரிக்கின்றது. குறிப்பாக இவ்விதமான குடிவரவாளர்களை எவ்விதம் அவர்களைப் பணியிலமர்த்துவோர் அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கின்றார்கள் என்பதை, வேலை வாய்ப்பு முகவர்கள் எவ்விதம் இவ்விதமான தொழிலாளர்களின் நிலையைத்தமக்குச் சாதகமாக்கி வேலை வாய்ப்பென்னும் ஆசை காட்டி, பணத்துக்காக ஏமாற்றுகின்றார்கள் என்பதையெல்லாம் நாவல் விபரிக்கின்றது. இவ்வளவுதூரம் அலைக்கழிக்கும் வாழ்வினைக் கண்டு அஞ்சாது, துவண்டு விடாது இந்நாவலின் நாயகன் எவ்விதம் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தன் பயணத்தைத் தொடர்கின்றான் என்பதை நாவல் கூறும். அதே சமயத்தில் இலங்கையின் வரலாற்றில் களங்கமாகவிருக்கும் 1983 ஜூலைக்கலவரத்தை வெளிப்படுத்தும் ஆவணப்பதிவாகவும் இந்நாவல் விளங்குகின்றது.