இன்று நவம்பர் 7, 2015 அன்று தமிழ் இலக்கியத்தோட்டம் மற்றும் காலம் சஞ்சிகை ஏற்பாட்டில் அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவாக அஞ்சலிக்கூட்டமொன்று நடைபெற்றது. எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முனைவர் நா.சுப்பிரமணியன், ‘உரையாடல்’ நடராஜா முரளிதரன், ‘காலம்’ செல்வம், முனைவர் வெங்கட்ரமணன், எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் மற்றும் தலைமை வகித்த என்.கே. மகாலிங்கம் ஆகியோர் வெங்கட் சாமிநாதன் பற்றிய தமது கருத்துகளை முன் வைத்தனர்.
வழக்கமாக நடைபெறும் இலக்கியக் கூட்டங்கள் போலன்றி, நிகழ்வில் உரை நிகழ்த்தியவர்கள் தாம் இருந்த இடங்களில் இருந்தபடியே தமது கருத்துகளை எடுத்துரைத்தனர். சபையோரும் தம் கருத்துகளை உரையாடல்களுக்கு மத்தியில் தெரிவிக்கும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது பயன்மிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைந்திருந்தது.
எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்கள் வெங்கட் சாமிநாதனின் கலை, இலக்கியப்பங்களிப்பு குறித்து, ‘பாலையும், வாலையும்’ என்னும் ‘எழுத்து’ சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் மூலம் தமிழ்க்கலை, இலக்கிய உலகில் வெங்கட் சாமிநாதன் பலரது கவனத்தை ஈர்த்தது பற்றி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்கள் எவ்விதம் மஹாகவி போன்ற பலரை ஒதுக்கினார்கள் என்பது பற்றி, அக்காலகட்டத்தில் வெங்கட் சாமிநாதன் கலகக்குரலாக இயங்கியது பற்றி, பிரமிள் மற்றும் கவிஞர் திருமாவளவன் போன்றோர் பற்றி குறிப்பாக கவிஞர் திருமாவளவன் பற்றி எழுதித் தமிழகத்தில் அவர் அங்கீகாரம் பெறக்காரணமாக இருந்தது பற்றி, பிரமிள் டெல்லியில் வெங்கட் சாமிநாதனுடன் சென்று தங்கியிருந்தது பற்றி, பின்னர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இலக்கிய மோதல்கள் பற்றி, மடை திறந்த வெள்ளமென பக்கம் பக்கமாக எழுதும் வெ.சா.வின் இயல்பு பற்றி, ஆரம்பத்தில் வெ.சாமிநாதன் என்றே எழுதியவர் பின்னர் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியது பற்றி, தி.ஜானகிராமனின் எழுத்தில் வெ.சா. கொண்டிருந்த மதிப்பு பற்றி, வெ.சா.வின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கிலக்கட்டுரைகள் மூலமான பங்களிப்பு பற்றி, இவ்விதம் பல்வேறு கோணங்களில் வெங்கட் சாமிநாதனைப்பற்றிய தனது நினைவுகளைப்பகிர்ந்து கொண்டார்.