எழுதுபதுகளில் யாழ் கஸ்தூரியார் வீதியில் (நாவலர் வீதிக்கு அண்மையில்) செந்தில்நாதன் என்னும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவரது வீடு மூன்று தளங்களை உள்ளடக்கிய (மொட்டை மாடியையும் உள்ளடக்கி) வீடு. இவர் தனது தொழிலான சட்டத்துறையில் எவ்விதம் மிளிர்ந்தார் என்பது தெரியாது. ஆனால் ஒரு விடயத்தில் இவர் என் கவனத்துக்குரியவரானார். தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் தொலைக்காட்டியொன்றினை வைத்து இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வது வழக்கம். யாழ்ப்பாணத்தில் வானியற் கழகமொன்றினையும் இவர் நிறுவி நடாத்தி வந்ததை பத்திரிகைச்செய்திகள் வாயிலாக (அநேகமாக ஈழநாடு பத்திரிகை) அறிந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் வானியலில் ஈடுபாடு கொண்டிருந்த இந்த வழக்கறிஞர் மாணவர்களாகிய எமக்கு வியப்புக்குரியவராக இருந்தார்; வித்தியாசமானவராகவுமிருந்தார்.
எனக்கு வானியல், வானியற்பியல் ஆகியவற்றில் என் மாணவப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாடு. எனக்கு வானியற்பியல் பற்றிய ஆர்வத்துக்கு முக்கியமான காரணங்களில் சில: யாழ் பொது நூலகத்தில் நான் வாசித்த விஞ்ஞான நூல்களும், அப்பாவும்தாம். என் குழந்தைப்பருவத்தில் இரவுகளில் அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி, அப்பாவுடன் சேர்ந்து இரவு வானையும், அங்கு கொட்டிக்கிடக்கும் சுடர்களையும் இரசிப்பதுண்டு.
வானியற்பியல் என்றதும் இன்னுமொருவர் ஞாபகமும் வருகின்றது. யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், உயிரியல் என்னும் பாடத்துக்கு ஆசிரியராக வந்தவர் ‘கட்டைச்சுப்பர்’ என்ற பட்டப்பெயருக்குரிய ஆசிரியர். பிறவுண் வீதியில் இருந்தவர். நீண்ட ‘தேர்மாஸ் பிளாஸ்கி’ல் ‘கோப்பி’ கொண்டு வருவார். அவருக்கு வானியலென்றால் உயிர். எங்களுக்கு உயிரியல் படிப்பிக்க வந்தவர், உயிரியல் பாடத்துக்கான நூலின் முன்னுரையில் இருந்த வானியல் பற்றிய ஒரு வசனத்தை எடுத்து, வானியல் பற்றி விரிவாக உயிரியலுக்குப் பதில் படிப்பிக்கத் தொடங்கி விட்டார். இரவு வானில் தெரியும் நட்சத்திரங்களை , நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியெல்லாம் படிப்பிக்கத்தொடங்கியதால் எமக்குக் கற்பிக்க வேண்டிய உயிரியல் பாடத்தைத்தவற விட்டு விட்டார். இறுதியில் இதன் காரணமாக அவரை மாற்றி சகாதேவன் மாஸ்ட்டரை உயிரியல் பாடத்துக்குக்கொண்டு வந்தார்கள்.
‘கட்டைச்சுப்பர்’ இவ்விதம் வானியல் பற்றிப்படிப்பித்ததை நான் உண்மையிலேயே விரும்பிப் படித்தேன். ஏனெனில் எனக்கு மிகவும் அத்துறையில் ஆர்வமிருந்ததால்தான். அதன் காரணமாகவே இன்றும் அவர் என் நினைவில் பசுமையாக இருக்கின்றார்.