வாசிப்பும், யோசிப்பும் 181: பேராசிரியர் நிமால் டி சில்வாவும், ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்”

பேராசிரியர் நிமால் டி சில்வாநல்லூர் ராஜதானி நகர அமைப்பு - வ.ந.கிரிதரன்மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் எமக்குக் கற்பித்த பேராசிரியர்களில் எப்பொழுதும் என் நினைவில் முதலில் வருபவர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள். இவர் சொந்தமாகக் கட்டடக்கலைஞராகத் தொழில் பார்த்து வந்த அதே சமயம் எமக்கு ‘பாரம்பர்யக் கட்டடக்கலை’ என்னும் பாடத்தினையும் எடுத்து வந்தார்.

இலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை எவ்வாறு சூழல்களுக்கேற்ற வகையில் வேறுபடுகின்றது, குறிப்பாகத்தென்னிலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை பற்றியெல்லாம் விரிவாகக் கற்பித்த அதே சமயம், மாணவர்களை அவர்கள் வாழும் பகுதிகளுக்குரிய கட்டடக்கலை பற்றிய கட்டுரைகளை எழுதும்படி ஊக்குவிப்பார். நான் யாழ்ப்பாணத்துக்குரிய பாரம்பரியக் கட்டடக்கலை பற்றி, குறிப்பாக நாற்சார வீடுகள் பற்றி, பாவிக்கப்படும் கட்டடப்பொருள்கள் பற்றி எழுதிய கட்டுரையைப் பாராட்டியது இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் மூலம் தாம் முதல் முறையாக ரோலன் டி சில்வாவின் பண்டைய அநுராதபுர நகரின் நகர அமைப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பெளத்தர்களின் கட்டடக்கலை, நகர அமைப்பில் எவ்விதம் வட்ட வடிவம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதைப் புரிய வைத்த கட்டுரை அது. பண்டைய அநுராதபுர நகர அமைப்பைப்பொறுத்த வரையில் நகரின் மத்தியில் சந்தையினையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் ஆங்காங்கே தாதுகோபுரங்களையும் கொண்டிருந்த நகர அமைப்பாக இருந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலம் எடுத்துரைத்திருப்பார் அந்தக் கட்டுரையில் ரோலன் டி சில்வா.

இந்த விடயத்தில் இந்துக்களின் நகர அமைப்பு, கட்டடக்கலை ஆகியவற்றில் சதுரம் (அல்லது செவ்வகம்) வகித்த பங்கு முக்கியமானது.

பெளத்தர்கள் வட்ட வடிவத்தையும், இந்துக்கள் சதுரத்தையும் தேர்தெடுத்ததற்கு அவர்களது சமயத்தத்துவங்கள் காரணமாக அமைந்திருந்தன. வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.

Continue Reading →