அலைகள் ஓய்வதில்லை – பெருமாள் கணேசன் அதிபர் விவகாரம்

அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!எழுத்தாளர் கருணாகரன்எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனின் நியமனம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இப்பொழுது இரண்டு அதிபர்கள். கடந்த 07.07.2016 இல் இருந்து இந்த நிலை நீடிக்கிறது. ஏற்கனவே அந்தப் பாடசாலையில் இருக்கும் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி,  தன்னுடைய இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு மாகாணக் கல்விச் செயலாளரிடம் விண்ணப்பித்ததாகத் தகவல். அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முடிவு வரும்வரை இந்த இழுபறி நிலை – தீர்மானமில்லாத தளம்பல் நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. இதைக்குறித்து கல்வி நிர்வாகம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதே இப்பொழுது பலருடைய எதிர்பார்ப்பும். இதற்கிடையில் இது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜாவிடம் கேட்டதற்கு அவர் முறையான பதிலை அளிக்கவில்லை என குளோபல் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.  எனவே இவற்றைப் பற்றியெல்லாம் நான் இப்பொழுது எதையும் எழுதவில்லை. காரணம், கல்வி நிர்வாகம் குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான அவகாசத்தைக் கோரியிருப்பதால் அதற்கிடையில் நாம் பேச முற்படுவது பொருத்தமற்றது என்பதே. ஆனால், நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில் என்னுடைய இந்தப் பதிவு இங்கே வேறு சில முக்கியமான விசயங்களைச் சொல்ல முற்படுகிறது. இது அவசியமானதாக இருப்பதால் இதைப் பதிவிடுகிறேன்.

கடந்த 09.07.2016 அன்று எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனுடைய அதிபர் நியமனத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவையிட்டிருந்தேன். அந்தத் தகவலை வேறு பல இணையத்தளங்களும் செய்தியாகப் பிரசுரித்துமிருந்தன. அதைப் பலரும் பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து பலவிதமான தொனியிலும் நிலைப்பாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளையும் எழுதியிருந்தனர். அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகள்.

Continue Reading →

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்! சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் – நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் – அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை? என்பதை கடந்த ஏழு வருட காலத்தில் தம்மால் அறிந்தும் – தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தின் தலைவர் திருமதி கா.ஜெயவனிதா,

தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் – தமக்கான தொழில்துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை பயன்படுத்தி, இதற்காகவே காலத்தையும் நீட்டிப்பு செய்துகொண்டு திரியும் ‘இடைத்தரகர்’ அமைப்புகள், உறவுகளை தேடியலையும் தமது பயணத்தில் குறுக்கீடு செய்யாமல் தாமாகவே விலகி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், இனியும் இவ்வாறான அநாகரிக நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள் – அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு பகிரங்கப்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைமைகள் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தை விடவும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளே பாரிய தடைக்கற்கள்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களுக்கு ‘அது செய்யப்போகின்றோம் – இது செய்யப்போகின்றோம்’ என்று கூறி, வெளிநாட்டு என்.ஜி.ஓக்களிடமிருந்து பெருந்தொகை நிதியை பெற்று, அதையே தமக்கான ஒரு தொழில்துறையாகவும் – வேலைத்திட்டமாகவும் எடுத்துக்கொண்டு, இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், தம்மில் பல குடும்பங்கள் சோர்வடைந்து – மனச்சலிப்படைந்து, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கியிருப்பதாகவும், நீதியை கோரும் அழுத்த மற்றும் கவனவீர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் ஜெயவனிதா கவலை தெரிவித்தார்.

Continue Reading →

கனடா: வேம்படி மகளிர் கல்லூரியின் நுண்கலையை வளர்க்கத்துடிக்கும் கனேடிய இளம் தாரகை !!

கனடா: வேம்படி   மகளிர் கல்லூரியின் நுண்கலையை வளர்க்கத்துடிக்கும் கனேடிய  இளம் தாரகை !!அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?? என்று பெண்களை இழிவு  படுத்தி இருட்டடிப்புச் செய்த காலத்தில் பெண்களுக்கான மூலாதாரமாக முதன்மைப்பாடசாலையாக பிரித்தானியரால் 1834 அளவில் நிறுவப்பட்டதுதான் வேம்படி மகளிர் கல்லூரி. ‘கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால்  வையம் பேதமை யற்றிடும் காணீர்”என்கின்ற பெரும் புத்துணர்விற்கு பெண்களை இட்டுச் சென்றது இக்கல்லூரியின் தோற்றம். அதி வணக்கத்திற்குரிய குருமார்கள்  பீற்றர் பார்ச்சிவல், ஜேம்சு லிஞ்ச்,தோமஸ் ஸ்குவான்சு ஆகியோரின் பெருமுயற்சியால்  உருவாக்கப்பட்ட வேம்படி மகளிர் கல்லூரியானது  ஈழத்து தமிழ்  மாதர்களின் கல்வியை, அறிவை, கலாச்சாரத்தை,வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பி நிற்கின்ற    மாபெரும் கலைக் கோவிலாகும்.  யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாக இன்று மிளிர்கின்றது. . இந்த  ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் சாதனையாக  யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் என்கின்றது கல்வித்   திணைக்களத்தின் புள்ளி விபரம் . இத்தகு வரலாற்றுப்  புராதனமும்,பெருமையுமிக்க  வேம்படி மகளிர் கல்லூரியில் கவின் கலைகளை வளர்ப்பதற்கான அரும் பெரும் முயற்சிக்கான அடித்தளமாக டொரோண்டோவில் பிறந்து வளர்ந்து நாட்டியக்கலையில் சாதனை படைத்து நிற்கும் செல்வி ஐஸ்வர்யா சந்துரு அவர்கள் நாட்டிய தர்ப்பணம் எனும் அற்புத நிகழ்வை 16 ந்திகதி ஜூலை அன்று  நடாத்தி  எம்மை எல்லாம் அதிர வைத்தார். மண்டபம் நிறைந்த மக்கள் சூழ அவரின் அற்புதமான  நாட்டிய தர்ப்பணம் கலை மன்றம் ஆதரவில்  “தோர்ன்கில்” நகர கவின் கலைப் பெருஅரங்கில் வெற்றிகரமாக நடந்தேறியது.  

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார். மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த ஆளுமையின் நாட்குறிப்பும் தொலைந்தது பாதிக்கப்பட்டவர்களின் ஆத்மக்குரலை இலக்கியத்தில் பதிவ

செ.கதிர்காமநாதனின் 'நான் சாக மாட்டேன்.'எழுத்தாளர் செ.கதிர்காமநாதன்” செ.கதிர்காமநாதன்  பட்டப்படிப்பு  முடிந்ததும்  இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை   நிறுவனம்  ஒன்றில்  சில  ஆண்டுகள் பணிபுரிந்தார்.    இக்காலம்  மிக  இக்கட்டான  காலம்.  தக்க  ஊதியமே இவருக்கு கிட்டவில்லை.   எழுத்தாளரான  இவருக்குக் கிடைத்த மாதச்சம்பளத்தையே    சொல்லத்தயங்கினார்.   தன்  உழைப்பிற்கேற்ற ஊதியம்   கிடைக்கவில்லை என்று  வருந்தினார்.  மனம் நொந்தார். கூடிய   ஊதியம்  கிடைக்கத்தக்க  இடங்களிலெல்லாம்  வேலைக்காக முயன்றுகொண்டேயிருந்தார். பத்திரிகையில் பணியாற்றியவேளை  ஒரு  நாவலையும்  அதே இதழில்  தொடராக  எழுதினார்.   அதற்குத்தனியாக  பணம் கிடைத்ததா ? என்று  கேட்டேன். கிடைத்த  தொகையை வேதனையோடுதான்  கூறினார். வழமையான   லாப நோக்காகவா ?  அவரது  உழைப்பிற்கு நன்றிக்கடனாகவா ?   இலக்கிய  ஆர்வத்தினாலேயா?  தெரியவில்லை. அவரது    மொழிபெயர்ப்புக்கதை  ஒன்றையும்  முன்னர்  வெளியிட்ட மூன்று   சிறுகதைகளையும்  சேர்த்து  இன்று   நூலாக வெளியிட்டுள்ளனர், அவர் பணியாற்றிய  நிறுவனத்தினர். 113   பக்கம்.    கிரவுன் 1/8 மடித்தாளில்  நியுஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட   இந்நூலின்   விலை  ரூ.2/25. மலிவுப் பதிப்பு  நூல்களை  வெளியிட்டு  வெற்றி  (இலாபத்தில்) பெற்று விட்டதாகக்கூறும்   இவர்கள்  தந்த  நூல்களில்  இதுவே முதன்மைபெறுகிறது. நூலின் பெயர்:நான் சாகமாட்டேன்.”

மேற்கண்டவாறு  கொழும்பிலிருந்து  1972  இல்  செ. கணேசலிங்கன் தாம்   வெளியிட்ட  குமரன்  இதழில்  ஒரு  சிறிய  கட்டுரை எழுதியிருந்தார்.   செ.கதிர்காமநாதன்  மறைந்தவுடன்  பதிவான நினைவஞ்சலிக்குறிப்பாக   அதனை  எடுத்துக்கொள்ளலாம்.

அவர்   மறைவதற்கு  சில  மாதங்களுக்கு  முன்னர்  ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான்   முதலும்  கடைசியுமாக  நான் அவரைச்சந்தித்தேன். அக்கூட்டம்  கொள்ளுப்பிட்டி  தேயிலைப் பிரசார  சபை  மண்டபத்தில் நடந்தது.   முன்வரிசையிலிருந்த  கதிர்காமநாதனை  எனக்குக் காண்பித்தவர்   நண்பர்  மு. கனகராஜன்.   நிகழ்ச்சி  முடியும்பொழுது இரவு   எட்டுமணியும்  கடந்துவிட்டது.    தொலைவிலிருந்து வந்திருந்தமையினால்   அவரைச்சந்தித்துப்பேசமுடியாமல்,   பிறிதொரு   சமயம்  பார்க்கலாம்  என்ற  எண்ணத்தில் புறப்பட்டுவிட்டேன். ஆனால் , அதன்பின்னர்  அவரைச்சந்திக்கவே முடியாமல்போய்விட்டது.

Continue Reading →