வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், ‘கட்டைச்சுப்பரும்’…….

வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், 'கட்டைச்சுப்பரும்'.......எழுதுபதுகளில் யாழ் கஸ்தூரியார் வீதியில் (நாவலர் வீதிக்கு அண்மையில்) செந்தில்நாதன் என்னும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவரது வீடு மூன்று தளங்களை உள்ளடக்கிய (மொட்டை மாடியையும் உள்ளடக்கி) வீடு. இவர் தனது தொழிலான சட்டத்துறையில் எவ்விதம் மிளிர்ந்தார் என்பது தெரியாது. ஆனால் ஒரு விடயத்தில் இவர் என் கவனத்துக்குரியவரானார். தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் தொலைக்காட்டியொன்றினை வைத்து இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வது வழக்கம். யாழ்ப்பாணத்தில் வானியற் கழகமொன்றினையும் இவர் நிறுவி நடாத்தி வந்ததை பத்திரிகைச்செய்திகள் வாயிலாக (அநேகமாக ஈழநாடு பத்திரிகை) அறிந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் வானியலில் ஈடுபாடு கொண்டிருந்த இந்த வழக்கறிஞர் மாணவர்களாகிய எமக்கு வியப்புக்குரியவராக இருந்தார்; வித்தியாசமானவராகவுமிருந்தார்.

எனக்கு வானியல், வானியற்பியல் ஆகியவற்றில் என் மாணவப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாடு. எனக்கு வானியற்பியல் பற்றிய ஆர்வத்துக்கு முக்கியமான காரணங்களில் சில: யாழ் பொது நூலகத்தில் நான் வாசித்த விஞ்ஞான நூல்களும், அப்பாவும்தாம். என் குழந்தைப்பருவத்தில் இரவுகளில் அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி, அப்பாவுடன் சேர்ந்து இரவு வானையும், அங்கு கொட்டிக்கிடக்கும் சுடர்களையும் இரசிப்பதுண்டு.

வானியற்பியல் என்றதும் இன்னுமொருவர் ஞாபகமும் வருகின்றது. யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், உயிரியல் என்னும் பாடத்துக்கு ஆசிரியராக வந்தவர் ‘கட்டைச்சுப்பர்’ என்ற பட்டப்பெயருக்குரிய ஆசிரியர். பிறவுண் வீதியில் இருந்தவர். நீண்ட ‘தேர்மாஸ் பிளாஸ்கி’ல் ‘கோப்பி’ கொண்டு வருவார். அவருக்கு வானியலென்றால் உயிர். எங்களுக்கு உயிரியல் படிப்பிக்க வந்தவர், உயிரியல் பாடத்துக்கான நூலின் முன்னுரையில் இருந்த வானியல் பற்றிய ஒரு வசனத்தை எடுத்து, வானியல் பற்றி விரிவாக உயிரியலுக்குப் பதில் படிப்பிக்கத் தொடங்கி விட்டார். இரவு வானில் தெரியும் நட்சத்திரங்களை , நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியெல்லாம் படிப்பிக்கத்தொடங்கியதால் எமக்குக் கற்பிக்க வேண்டிய உயிரியல் பாடத்தைத்தவற விட்டு விட்டார். இறுதியில் இதன் காரணமாக அவரை மாற்றி சகாதேவன் மாஸ்ட்டரை உயிரியல் பாடத்துக்குக்கொண்டு வந்தார்கள்.

‘கட்டைச்சுப்பர்’ இவ்விதம் வானியல் பற்றிப்படிப்பித்ததை நான் உண்மையிலேயே விரும்பிப் படித்தேன். ஏனெனில் எனக்கு மிகவும் அத்துறையில் ஆர்வமிருந்ததால்தான். அதன் காரணமாகவே இன்றும் அவர் என் நினைவில் பசுமையாக இருக்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 178: நூல் அறிமுகம்: ‘தோழர் பால’னின் ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ பற்றி….

பாலன் தோழர்தோழர் பாலனின் ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. ‘கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ‘ என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது

அண்மைக்காலமாகவே , குறிப்பாக இலங்கையில் யுத்தம் மெளனிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து இந்நாள் வரையில் உபகண்ட அரசியலைக்கூர்ந்து நோக்கினால், இந்தியா இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளைத்தன் மாநிலங்களைப்போலவே பயன்படுத்தி வருவதைப்போன்றதொரு நிலையினை அவதானிக்க முடிகின்றது. தன் நலன்களுக்கேற்ப அது ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் பார்க்கும்போது (காங்கேசன் துறைத்திட்டம், பலாலி விமான நிலையத்திட்டம், புகையிரத்தப்பாதை மீளமைப்புத்திட்டங்கள், சம்பூர் அனம் மின்சார நிலையத்திட்டம், திருகோணமலை எண்ணெய்ச்சுத்திகரிப்பு நிலையத்திட்டம் என இவை போன்ற பல திட்டங்கள்) எவ்வளவு தூரம் இந்தியாவின் தலையீட்டில் இலங்கை அகப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

Continue Reading →

அறிவியல் புனைகதை: ’மவுஸ்’ –

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.

செய்தி இதுதான்.
|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|

எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது—குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்—இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை—கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.

Continue Reading →

நேதாஜிதாசன் கவிதைகள் ஐந்து!

நேதாஜிதாசன் கவிதைகள் 5!1) நேற்றை வரம் கேட்க சொன்னதால்

நேற்றை கொஞ்சம் நில் என சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனேன்.
கற்சிலைகள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது.
நான் வெளியே போய் நேற்றை கோயிலுக்குள் அழைத்து சென்று ஏதாவது கேள் எனக்கு பதிலாக எனக்கு கூச்சமாக இருக்கிறது என்றேன்.
எனக்கு வானமும் நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் மரமும் வேண்டும் என்று கேட்டது.
கற்சிலை திருதிருவென முழித்து ஆளை விடு என அமைதியானது.
அடுத்த நாள் நிலநடுக்கம்
கோயில் தரைமட்டமாகியிருந்தது நேற்றுடன்.

2) தற்கொலையும் கேள்வியும்

அழுதுகொண்டே தற்கொலை வந்து நிற்கிறது.
கடல் அழுகிறது
கண்ணீர் அலையாக அலைகிறது.
கடல் அழுகிறது
கண்ணீர் அலையாக அலைகிறது
தற்கொலை இறந்தபின்பும்
யாருக்காக அழுகிறது  இந்த கடல் ?
யாருக்காக அலைகிறது இந்த அலை ?

3) டையரி குறிப்புகள்

வலியின் மொழியினால் கடிதம் எழுதி கனவின் சிறுகதையில் சேர்த்து கற்பனையின் மொழியுடன் கலந்து பார்த்த போது என்னை நானே மொழிபெயர்த்து கொண்டிருந்தேன் பேனாத்தலை காகித உடலுடன் பிணத்தின் டையரிகளின் மேல் .

Continue Reading →

கவிதை: மல்லிகை மணக்கிறது !

எழுத்தாளர் டொமினிக் ஜீவா!

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க

அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க

Continue Reading →