இன்று 3600 கிங்ஸ்டன் வீதியில் அமைந்திருக்கும் ‘ஸ்கார்பரோக் கிராமச்சமுக’ நிலையத்தில் கலாச்சாரப்பேரவை, கரவெட்டி மற்றும் தேடகம் – கனடா ஆகியவற்றின் ஆதரவில் வெளியிடப்பட்ட அமரர் ‘செ.கதிர்காமநாதன் படைப்புகள்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வுடன் கூடவே ‘காலம்’ செல்வம் அவர்களின் ‘வாழும் தமிழ்’ புத்தகக்கண்காட்சியும் நடைபெற்றது.
செல்லும்போது சிறிது தாமதமாகிவிட்டது. நிகழ்வு எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் அ.கந்தசாமி உரையாற்றிக்கொண்டிருந்தார். தனக்கேயுரிய கவித்துவ மொழியில் அவரது உரை அமைந்திருந்தது. அவர் தனதுரையில் செ.கதிர்காமநாதனின் குடும்பச்சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். செ.க.வே முதன் முறையாக பிறநாட்டுப்பாத்திரங்களை வைத்துப் புனைகதை எழுதியவராக அவர் தனதுரையில் குறிப்பிட்டார். அதற்குதாரணமாக செ.க.வின் ‘வியட்நாம் உனது தேவைதைகளின் தேவவாக்கு’ என்னும் சிறுகதையினைச் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் செ.கதிர்காமநாதனின் தமக்கையாரான இந்திராணி மகேந்திரநாதன் அவர்கள் தனது தம்பி பற்றிய உணர்வுகளைப்பகிர்ந்து கொண்டார். மிகவும் மெதுவான குரலில் அவரது உரை அமைந்திருந்ததால் பலருக்கும் ஒழுங்காகக் கேட்டிருக்குமோ என்று சந்தேகமாயிருந்தது. அவர் தனதுரையில் இளமைக்கால வாழ்வு, இலக்கிய முயற்சிகள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைத்தார்.
அவரைத்தொடர்ந்து எழுத்தாளர் ‘அலை’ யேசுராசா அவர்கள் செ.கதிர்காமநாதனின் புனைகதைகள் பற்றி, மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி விரிவாகவே எடுத்துரைத்தார். செ.கதிர்காமநாதன் நல்லதொரு வாசகராகவும், எழுத்தாளராகவுமிருந்ததாலேயே தரமான பிறமொழி ஆக்கங்களையெல்லாம் அவரால் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடிந்தது என்பதைச்சுட்டிக்காட்டினார். அவரைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுக்குத் தேடகம் (கனடா)வுடன் இணைந்து ஒத்துழைத்த கரவெட்டி கலாச்சாரப் பேரவையினைச்சேர்ந்த அம்பிகைபாலன் செ.கதிர்காமநாதன் பற்றிய தனதுரையினை ஆற்றினார்.
venkat_swaminathan_new_a
Copyright © 2024 இரவி — Primer WordPress theme by GoDaddy