எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனின் நியமனம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இப்பொழுது இரண்டு அதிபர்கள். கடந்த 07.07.2016 இல் இருந்து இந்த நிலை நீடிக்கிறது. ஏற்கனவே அந்தப் பாடசாலையில் இருக்கும் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி, தன்னுடைய இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு மாகாணக் கல்விச் செயலாளரிடம் விண்ணப்பித்ததாகத் தகவல். அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முடிவு வரும்வரை இந்த இழுபறி நிலை – தீர்மானமில்லாத தளம்பல் நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. இதைக்குறித்து கல்வி நிர்வாகம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதே இப்பொழுது பலருடைய எதிர்பார்ப்பும். இதற்கிடையில் இது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜாவிடம் கேட்டதற்கு அவர் முறையான பதிலை அளிக்கவில்லை என குளோபல் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. எனவே இவற்றைப் பற்றியெல்லாம் நான் இப்பொழுது எதையும் எழுதவில்லை. காரணம், கல்வி நிர்வாகம் குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான அவகாசத்தைக் கோரியிருப்பதால் அதற்கிடையில் நாம் பேச முற்படுவது பொருத்தமற்றது என்பதே. ஆனால், நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில் என்னுடைய இந்தப் பதிவு இங்கே வேறு சில முக்கியமான விசயங்களைச் சொல்ல முற்படுகிறது. இது அவசியமானதாக இருப்பதால் இதைப் பதிவிடுகிறேன்.
கடந்த 09.07.2016 அன்று எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனுடைய அதிபர் நியமனத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவையிட்டிருந்தேன். அந்தத் தகவலை வேறு பல இணையத்தளங்களும் செய்தியாகப் பிரசுரித்துமிருந்தன. அதைப் பலரும் பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து பலவிதமான தொனியிலும் நிலைப்பாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளையும் எழுதியிருந்தனர். அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகள்.