‘மலையாள எழுத்தாளரான கமலாதாஸ் ‘என்கதை’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்தபோது மலையாள இலக்கிய உலகில் மாத்திரமல்ல மலையாள சமூகத்திலேயே அது பெரும் புயலைக் கிளப்பியது. அவரது ‘என் கதை’ நூலாக வெளியானபோது பதினொரு மாதங்களிலேயே ஆறு மறு பதிப்புகளைக் கண்டது. முப்பத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாகித் தீர்ந்தன. தன் வாழ்க்கையில் தனது இந்த சுயசரிதையை எழுதும்போது தான் அடைந்த மகிழ்ச்சியை வேறு எந்த நூலும் தந்ததில்லை என்று அவர் கூறுகின்றார். கமலாதாஸின் எழுத்துக்களைப்பற்றி அதீத பாராட்டுக்களும், கடுமையான கண்டனங்களுமாக பல்வேறு நிலைப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று மீளாள் நித்தியானந்தன் கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை, லண்டனில் இடம்பெற்ற பெண்களின் கருத்தாடல் நிகழ்வில் பங்குபற்றிப் பேசியபோது குறிப்பிட்டார். நவரட்னராணி சிவலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மீனாள் நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது ‘தந்தைவழி சமூக அமைப்பிற்குள் பெண் என்பவள் மூச்சுவிடமுடியாமல் திணறும் அவஸ்தையைப் பற்றி கமலாதாஸ் காரசாரமான வாதங்களை இந்த நூலிலே முன்வைத்திருக்கிறார். அவரது தந்தை, அவரது கணவர், அவரது நாலப்பாட்டுக் குடும்பத்தின் ஆண்மக்கள் அனைவருமே கொண்டிருந்த ஆணாதிக்கக் கொடுமையை கமலாதாஸ் இந்த நூலிலிலே ஒளிவு மறைவின்றி எழுதிச் செல்கிறார். அமைதியும் நிம்மதியும் குலைந்த சூழலில், கொந்தளிக்கும் கடலின் நடுவில் சுழல்வதுபோலச் சிக்கி, வாராத துணைநாடி அலைமோதும் தன் நெஞ்சத்துக் குமுறல்களை அவர் அநாயாசமாக எழுதிச் செல்கிறார். கமலாதாஸின் ‘என் கதை’ என்ற சுயசரிதை இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டார்’
ஈழத்தில் இசைக்காகவென்றே நிர்மாணிக்கப்பட்ட இராமநாதன் நுண்கலைக்கல்லூரியின் அதிபராகத் திகழ்ந்து சிறந்த இசை ஆசிரியராகப் புகழ்பெற்ற ஸ்ரீமதி சரஸ்வதி பாக்கிராஜா அவர்களின் மறைவு ஈழத்து இசை உலகின் மிகப் பெரிய ஆளுமையை இழந்து நிற்கும் சூனியத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தன் இறுதிக் காலங்களில் எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சிக்காக அவரோடு நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நாட்களை மிகுந்த துயரத்தோடு நினைவு கூருகின்றேன். சுகவீனமான நிலையிலும் எனது கேள்விகளுக்கு பொறுமையாகவும், பரிவோடும் பதில் சொல்லிய அந்தப் பெருமனதை வியந்து பார்க்கின்றேன். எந்த நேரத்தில் தொலைபேசி எடுத்தாலும் சலிப்பில்லாமல் ஒரு தாயின் கனிவோடு என் கேள்விகளுக்கு அவர் பதில் தர முயற்சித்தும் சட்டென அவருக்கு நினைவுபடுத்தமுடியாத நிலையில் ‘மாலிக்கு இது தெரியும் அவரிடம் இதைக் கேட்டுப்பாருங்கள்’ என்று கூறுவதையும் நினைவுகூருகின்றேன். அவருடைய பேட்டியோடு எனது ‘மகரந்தச் சிதறல்’ நூல் சென்னையில் வெளியாகிவிட்ட போதிலும் அதனை அவரிடம், அவரின் கரங்களில் நேரடியாக கையளிக்கும் பாக்கியத்தை இழந்து போனேன் என்று நினைக்கும்போது நான் மேலும் துயரத்தில் ஆழ்கின்றேன்.
1. கவிதை: கறுப்பு ஜுலை 1983: மானுட அவலம் என்பதன் வடிவம!
எண்ணிப் பார்க்கையில் எத்தனை நினைவுகள்.
கண்ணீர்த் தீவின் வரலாற்றை மாற்றிய
கறுப்பு ஜீலை எண்பத்து மூன்று.
மானுட அவலம் என்பதன் வடிவம்.
மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்
மொழியின் பெயரால் நாட்டின் பெயரால்
இதுவரை மானுடர் மடிந்தது போதும்.
இனியும் வேண்டாம் இந்த அவலம்.
இனத்தின் பெயரால் இங்கே ஒருவர்
கூனிக் குறுகி அவமா னத்தால்
இருக்கும் காட்சி காணும் போதினில்
சிந்தையில் எழும் வினாக்கள் பற்பல.
யாரிவர்? எங்கி ருந்து வந்தார்?
குடும்பம் ஒன்றின் தலைவரா அல்லது
உறவுகள் அற்ற மானுடர் ஒருவரா?
இனவெறி மிகுந்து இங்கு வெறியுடன்
ஆடி நிற்கும் காடையர் முகங்கள்
மானுட அழிவின் பிரதி பலிப்புகள்.
இந்த மனிதர் இங்கே தனிமையில்
நாணி, வாடி, ஒடிந்து கிடக்கின்றார்.
இவரை இவ்வித மழித்த மானுடர்
மானுட இனத்தின் அவமானச் சின்னங்கள்..
மானுட உரிமை ஆர்வலர் மற்றும்
அனைவரு மெழுவீர்! எழுவீர்! எழுந்து
நீதி கிடைத்திட ஒன்றெனத் திரள்வீர்!
நடந்த வற்றில் பாடத்தைப் படித்து
நல்வழி தேர்ந்து பயணம் தொடர்வோம்.
சிறிய கோளில் மோதல்கள் எதற்கு.
அறிவுத் தளத்தில் அனைத்தையும் அணுகின்.
இதுவரை மோதலில் போரினில் மற்றும்
அனைத்து அழிவினில் மடிந்த துடித்த
மக்களை எண்ணியே பார்ப்போம். பார்த்து
இம்மண் மீதினில் புதிய பாதை
சமைப்போம். வகுப்போம். தொடர்வோம், மகிழ்வோம்.