கவிதை: நாங்களும் எச்சங்களே

கவிஞர் வாண்மதிஎன் கண்முன்னே
எத்தனையோ உருவங்கள்
அத்தனையும்
ஏதோவொரு
தருணத்தில்
ஆண்
என்றே
அடையாளப்படுத்தப்படுகின்றன.

பேச்சில் போலித்தனம்
பார்வையில் கள்ளத்தனம்
செய்கையில் சில்மிசம்
மனதில் வக்கிரம்

இதைத்தாண்டி
இராவணன் போல ஆண்
இந்தப்பூமியில்
இருந்தால்
பெண்ணுக்கான
மதிப்பையும்
பாதுகாப்பையும்
இருபது கைகளையும்
இரண்டாக
இணைத்துத் தருவானா?

இராமனாக வேசமிடாதீர்
இராவணனாக வாழுங்கள்!

Continue Reading →

அதிபர் நியமனத்தில் முறைகேடு – எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!

அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!அதிபர் நியமனத்தில் முறைகேடு – எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!

– கவிஞர் கருணாகரன் –

எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விசயம் குறிப்பிடத்தக்களவு பொதுக்கவனத்தைப் பெற்றுமுள்ளது. இருந்தும் அவருக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான வெளிச்சங்களும் தென்படவில்லை. இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கும் அரசியல் ரீதியாக நீதியான தீர்வை நோக்கிக்கி, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கும் பலரும் முன்வந்திருப்பதாகத் தகவல்.

குறிப்பாக வடக்கு முதலமைச்சர்ன் விக்கினேஸ்வரனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் முன்வந்திருக்கின்றனர். இது சமரசமா? அல்லது மெய்யாகவே நீதி, நியாயத்துக்கான முயற்சியா என்பதை பொறுத்திருந்தே கவனிக்க வேணும். இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கமும் இதில் அக்கறை செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மனித உரிமைகள் அமைப்பில் நீதி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த மாதிரியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே மனித உரிமைகள் அமைப்பை நாடியபோது, அது அவற்றையெல்லாம் புசி மெழுகி அமுக்கி விட்டது. வடக்கில் செயற்படும் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பொது லேபிள் அமைப்புகளில் பெரும்பாலானவை சார்வு அரசியல் மயப்பட்டவை. ஆகவே அவற்றை நம்பிப் பயனில்லை.

கணேசன் கடந்த ஆண்டு கிளி/ பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டவர். அதற்குச் சொல்லப்பட்ட காரணம், அது ஒரு 1AB பாடசாலை. எனவே அதற்கு அதிபர் தரம் 01 ஐச் சேர்ந்தவர்களே அதிபராக இருக்க முடியும் என்று. அது நியாயமானதே. ஆனால், அந்தப் பாடசாலையைப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் அதை 1AB பாடசாலையாகத் தரமுயர்த்துவதற்கு முயற்சித்து அதைச் சாத்தியமாக்கியது கணேசனே.

அதேவேளை கணேசனின் அதிபர் தரம் மற்றும் கல்வித் தகுதியை ஒத்ததாக இருக்கும் பலர் இன்னமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல 1AB பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், கணேசனுக்கும் அவரோடு ஒத்த ஒரு சிலருக்கும் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்?

பாரதிபுரம், மலையத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்து குடியேறிய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்தங்கிய பிரதேசமாகும். ஆகவே இந்தப் பிரதேசத்தில் தரம்வாய்ந்த பாடசாலைகள் வேணும் என்ற அடிப்படையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் புதிதாக மூன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 182: தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து…

நாவல்: பார்த்தீனியம்தமிழ்நதிதமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் ‘கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே’ என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.

Continue Reading →

ஆய்வு: இலக்கியம்: புதுக்கவிதையில் அங்கதம்

ஆய்வு: இலக்கியம்: புதுக்கவிதையில் அங்கதம்முன்னுரை:
தமிழ்க்கவிதை வரலாற்றில் சங்கக் கவிதைகளுக்குப் பிறகு புதுக் கவிதைகளில்தான் உணர்வுகளை முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும் முயற்சி அழுத்தமாக இடம்பெறுகிறது எனலாம். புதுக்கவிதைகள் இன்றைய மனித மனத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி. மீராவின் “ஊசிகள்” கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள அங்கதம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

புதுக்கவிதையில் அங்கதம்:

அங்கதம்
தொல்காப்பியத்தில் அங்கதம்
அங்கதத்தின் தன்மை
அரசியல் அங்கதம்
சமுதாய அங்கதம்
தனி மனித அங்கதம்

என்ற பகுப்புகளின் கீழ் இக்கட்டுரையில் அங்கதம் குறித்த கருத்துக்களைக் காண்போம்.

அங்கதம் (Satire))
அங்கதம் என்பது ஒருவகை கேலியாகும். இது தீங்கையும், அறிவின்மையையும் கண்டணம் செய்வதாக அமையும். சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக் கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது. தமிழ்ப்புதுக்கவிதை தனியொரு இலக்கிய வகையாக நிலைபெற்றமைக்குப் படிமம், குறியீடு, அங்கதம் போன்ற இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி கருத்துச் செறிவும், கற்பனைச் செழுமையும் கூட்டிய கவிஞர்களின் முயற்சிகளே காரணமாகும். அங்கதம் சமுதாய உணர்வுடை கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டு புதுக்கவிதையைப் பொருட் சிறப்புடைய தாக்கியது என்பார் டாக்டர் சி.இ.மறைமலை.

Continue Reading →

மாஸ்ரர் படும் பாடு!

எழுத்தாளர் க.நவம்ஊரில் ஒரு கொஞ்சக் காலம் நான் ஒரு வாத்தியாராக வாழ்ந்திருந்தேன். அந்த மரியாதையின் நிமித்தமோ தெரியாது, இப்போதும் என் கண்முன்னே சிலர் என்னை ’மாஸ்ரர்’ என்று கூப்பிடுவர். கண்காணாத் தருணங்களில் சிலர் ‘வாத்தி’ என்றும், வேறு சிலர் ’சட்டம்பி’ என்றும் குறிப்பிடுதல் சாத்தியம்! என்னைப் பொறுத்தவரை, என் சொந்தப் பெயரைவிட இனிமையான வேறெந்த சொல்லையும் நான் இதுவரை கேட்டதில்லை! ஆகையால் மாஸ்ரர் என்ற அடைமொழி எனக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை. நான் எதிலும், எவர்க்கும், எப்போதும் ஒரு மாஸ்ரராக இருந்ததில்லை என்பதுடன் – இருப்பதில் எனக்கு விருப்பும் இல்லை என்பது பிடிப்பின்மைக்கான பிரதான காரணங்களுள் ஒன்று. இதேவேளை, இந்த மாஸ்ரர் எனும் வார்த்தைக்குப் பின்னால், வரலாற்று அடிப்படையில் இன்னொரு மாசு படிந்த பக்கமும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் தோற்றுவாயையும், சமகால சமூகத்தில் அது தோற்றுவித்துவரும் தொல்லை-தொந்தரவுகளையும் தொட்டுக்காட்டுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘உண்மை’ எனப் பொருளுணர்த்தும் Veritas என்ற இலத்தீன் வார்த்தையை, குறிக்கோள் வாக்காக வைத்துக்கொண்டுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஆகப் பழையதோர் உயர் கல்வி நிலையமாகும். 1636இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், உலகின் மிகச்சிறந்த 5 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 32 நாடுகளின் தலைவர்களையும், 47 நோபல் பரிசு பெற்ற மேதைகளையும், 48 புலிற்ஸர் பரிசுபெற்ற பத்திரிகையாளர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கியது. சுமார் 18.9 மில்லியன் நூல்களடங்கிய நூலகத்தைக் கொண்டது. இத்தகைய சிறப்புக்கள் மிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனது கல்விசார் பதவிப் பெயர்கள், சிறப்புப் பெயர்கள், தொழிற் பெயர்கள் மற்றும் தலைப்புக்கள் (titles) என்பவற்றிலிருந்து Master என்ற சொல்லை அகற்றிவிட, கடந்த மாதம் (பெப். 2016) தீர்மானம் எடுத்திருக்கிறது.

மாஸ்ரர் எனும் சொல்லானது அடிமை முறைமையின் கொடூரங்களையும் அவலங்களையும் எதிரொலிப்பதாகவும், அது உயர்கல்வி நிலையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மாணவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையே இம்முடிவுக்கான காரணமாகும். அறிஞர், ஆசிரியர் போன்ற பொருட்களை உள்ளடக்கிய Magister எனும் இலத்தீன் சொல்லின் வழிவந்த Master என்னும் பதத்தில், அடிமைத்துவத்தின் அடையாளம் எதுவுமில்லை என ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் வாதிட்டுவந்தது. ஆயினும் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலைமைக்குள் இப்போது பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, முதுமாணிப் பட்டத்தினைக் குறிக்கும் Master எனும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர, House Master என்ற விடுதிப் பொறுப்பாளரின் பதவிப் பெயர் போன்ற ஏனைய சுமார் 24 பதவிப் பெயர்களும் தலைப்புக்களும் அகற்றப்பட உள்ளன. இனவாத ஆதரவாளரான, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Woodrow Wilson பெயரில் உள்ள முக்கிய கட்டடம் ஒன்றின் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றும் ஹார்வார்ட் பல்கலைகழக நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Continue Reading →

சிறுகதை: எழுத்தாளர் காபெக்தனை பற்றி

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!– இந்த கதை போர்ஹேவின் அல்முட்டாசின் ஒர் அணுகுமுறை எனும் சிறுகதையின் வடிவத்தை தழுவி எழுதப்பட்டது. –


நாயின் தலை குதிரையின் உடலை உடைய விலங்குகளை பற்றி யோசித்திருக்கிறீர்களா ?

நேற்று ஒன்றை பார்த்தேன் அமேஸ் காடுகளில்.அதை பற்றி எழுதியே ஆகவேண்டும் என தோன்றியது . நல்ல கறுமையான முகம்.எச்சில் வடியும் நாக்கு.அந்த நாக்கை எப்போதும் சூழ்ந்திருக்கும்  காற்று. அதன் உடலை பார்த்தால் ஏற்கனவே நான் பார்த்த மனிதத்தலை குதிரை உடல் உடையவர்கள் நினைவுக்கு வந்தனர். ஏற்கனவே போர்ஹே நீலப்புலியை பற்றி சொல்லியிருந்தார். என்னுடைய நெருங்கிய நண்பரான காஃப்கா மனிதன் பூச்சியானதை சொன்னதும் நினைவுக்கு வந்தது . கனவு பதிப்பகத்தில் சமீபத்தில் தான் “புனைவாக்கத்தின் நனவு – காபெக்தன் ” எழுதிய புத்தகம் நினைவுக்கு வந்தது.

அதில் காபெக்தன் இவ்வாறு எழுதுகிறார்.அந்த கட்டுரையின் முக்கியமான பத்தி,

“புனைவில் இருந்து புனைவை உருவாக்கியவன் கற்றுக்கொள்கிறான். யூத இனவதை முகாம்களின் ஒவ்வொரு கட்டமைப்பிலும் யூதர்களை அழிக்க நினைத்தவரின் வார்த்தைகள் செங்கற்களுக்கு பதிலாக உள்ளது. புனைவின் மிருகங்களை எதிர்த்து ஒரு நாள் நாம் போராட வேண்டியிருக்கும். இந்த கட்டுரையை காபெக்தன் ஆன நான் ஏற்கனவே அலஸ்காவின் அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளேன் .புனைவின் மிருகங்களால் பலியானோரின் எண்ணிக்கை ஏழாயிரம் என இனஸ்கோவின் அறிக்கை சொல்கிறது.”

Continue Reading →

பெருமாள் முருகனும் மாதொருபாகனும்: படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்திற்கு சாவு மணி அடிக்கும் இந்துத்துவா பிற்போக்குவாதிகள்

எழுத்தாளர் முருகபூபதி– தமிழ்நாட்டில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் தடையை  உயர் நீதிமன்றம்  நீக்கியுள்ளது. மாதொரு பாகனுக்கு மாத்திரமின்றி  கருத்துச்சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி இது. தடை அழுத்தத்தினால்  தான் மரணித்துவிட்டதாகச்சொன்ன பெருமாள்முருகன் ஊரைவிட்டும்  சென்றார். இனி அவர் உயிர்த்தெழும் காலம்  கனிந்துள்ளது. இந்நாவல்    மீதான சர்ச்சை வெளியானபொழுது நான் எழுதிய நீண்ட கட்டுரையை மீண்டும் இங்கு பதிவு செய்கின்றேன். இதனை எழுதியபின்னர்தான்   மாதொருபாகன்   நாவல்  படிக்கும் சந்தர்ப்பம்  எனக்குக்கிடைத்தது.  -(முருகபூபதி –


சில    வருடங்களுக்கு  முன்னர்  தமிழ்நாட்டில்  மனோன்மணியம் சுந்தரனார்    பல்கலைக்கழகத்தில்  பாட  நூலாகவிருந்த  செல்வராஜ் எழுதிய  ஒரு  சிறுகதைத்தொகுப்பிலிருந்து  நோன்பு  என்ற சிறுகதையை    நீக்கவேண்டும்  என்று  இந்துத்துவா  அமைப்புகள் போராடின. சிறிது   காலத்தில்  மற்றும்  ஒரு  தமிழக  பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின்   சாபவிமோசனம்  சிறுகதையை  நீக்கவேண்டும் என்று  குரல்  எழுப்பியது. இலங்கையில்  வடபகுதியில்  உயர்வகுப்புகளில்  நாவல்  இலக்கிய வரிசையில்   இணைத்துக்கொள்ளப்பட்ட  மூத்த  எழுத்தாளர் செ.கணேசலிங்கன்    எழுதிய   முதலாவது  நாவல்  நீண்ட பயணம் நூலை   தவிர்த்துக்கொள்வதற்கு  மேட்டுக்குடியினர்   மந்திராலோசனை   நடத்துவதாக  அண்மையில்  ஒரு  தகவல் கிடைத்தது. இலங்கையின்   மூத்த  தலைமுறை    வாசகர்களுக்கு  நல்ல பரிச்சயமான   நாவல்  நீண்டபயணம்.    வடபகுதியின்  அடிநிலை மக்களின்    தர்மாவேசத்தையும்  ஆத்மக்குரலையும்  பதிவு  செய்த முக்கியமான   நாவல்.

இந்தப்பின்னணிகளுடன்    தற்பொழுது  தமிழக  இலக்கிய  உலகில் பெரும்  சர்ச்சையை   எழுப்பியிருக்கும்  பெருமாள்  முருகனின் மாதொருபாகன்  நாவலை   பார்க்கலாம். காலச்சுவடு   பதிப்பகம்  வெளியிட்டுள்ள  இந்நாவலுக்கு  எதிராக மீண்டும்    இந்துத்துவா    அமைப்பினரும்   இராமருக்கு  வக்காலத்து வாங்கும்   இராமகோபாலனும்  கோஷம்  எழுப்புகின்றனர். இராமகோபாலன்   பெருமாள்  முருகனை   அவன்…  இவன்… என்றெல்லாம்    ஒருமையில்  விளித்து  லண்டன்  பி.பி.சிக்கு பேட்டியளிக்கிறார். மதவெறியின்   உச்சம்  அவரது  குரலில்   தெரிகிறது. பகுத்தறிவுவாதம்    பேசிய  திராவிடக்கட்சிகள்  பெருமாள்  முருகன் விடயத்தில்   குரலை   தாழ்த்தியுள்ளன.   தி.முக.வுக்கும்  அண்ணா தி.மு.க.வுக்கும்   பெருமாள்முருகனைவிடவும்  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தான்   முக்கியத்துவமானது.
விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியைச்சேர்ந்தவரும்   மணற்கேணி மற்றும்    நிறப்பிரிகை  ஆசிரியருமான  ரவிக்குமார்  மாத்திரம் பெருமாள் முருகனுக்காக   குரல் கொடுத்துள்ளார்.  இடதுசாரி மாக்ஸீயக்கட்சிகளும்   குரல்  கொடுக்கத்தொடங்கியுள்ளன.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம் : ‘குட்டி’ விதை @ வடபழனி

நண்பர்களே, விதை இயற்கை அங்காடி கடந்த நான்கு வருடங்களாக அடையார் காந்தி நகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், தமிழ் ஸ்டுடியோவின் பியூர்…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா

10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம்…

Continue Reading →