மற்றவர்கள்,கட்டிடக்கூலிவேலைகள் தொட்டு…எந்த வேலைகளும் செய்ய பஞ்சி படாதவர்கள். வீட்டிலேயும், கெளரவம் பார்க்கிறது, தடுக்கிறது… எல்லாம் இருக்கவில்லை. வாப்பா பிரயாசைப்பட்டு ரேடியோ திருத்துறதை பழகிவிட முயல்கிறான். கற்றுக்குட்டிதான்.ஆனால் பாடாத ரேடியோவை, ஒரு கிழமை அல்லது நீள எடுத்து எப்படியும் பிழையைக் கண்டு பிடித்து திருத்தி விடுவான்.அதை விட லயன்ஸ் கிளப்பில் வகுப்புகள் எடுத்து வீடுகளிற்கு வயரிங், பிளமிங்… செய்கிறதுக்கு தெரிந்து வைத்திருக்கிறான். குஞ்சனின் அண்ணர் குகன் வீட்டுப்பெயின்றர். குஞ்சனும் மேசன் வேலையோடு,வீட்டுக்கு பெயின்ற் அடிக்கிறதைச் செய்கிறவன். நண்பர்கள்,அவனோடு இழுபட்டதால்… ஆதரவாளர்கள். அவனுடைய தாமரை இயக்கமும் கடைசியாக கழுகால் தடை செய்யப்பட… அவனும் அநாதரவாக நிற்கிற மாஜி தோழனாகி விட்டான் “சிந்திக்கிறதை எவரால் தடை செய்து விட முடியும்?” வீம்பு மட்டும் அவர்களிற்கு குறையவில்லை.
“ஒரு கிழமை அரசியல் மாறும் என்று நினைத்தால், இந்தியனாமி வந்த பிறகும் அப்படியே கிடக்கிறதடா?”என்றான் சலிப்புடன் நகுலன் .ஒவ்வொரு கிழமையும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து மிரட்டுவதைத்தான் அப்படி குறிப்பிட்டான். ஒன்றில் கழுகு மிரட்டும்,அல்லது இலங்கை ராணுவம் படுகொலைகள் புரிந்து நிற்கும். இந்தியனாமி வந்த பிறகும் பதற்றமான செய்திகளே கேட்கிறார்கள். பெரிய நாடுகளின் கொளுவல்களிற்காக சிறிலங்காவில் வன்முறை செறிவாக்கப் படுகிறது தான். முழு இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாக்க வேண்டும் என்ற வெறி பிடித்து அலையும் இவர்கள், “ இந்த நாட்டையும் கம்போடியா, வியட்னாம் போல …இயற்கை வளங்களை பாழ்படுத்தி அழித்தும்,, மக்களை வலது குறைந்தவர்களாக்கியும், வெடி குண்டுகள் விதைக்கப்பட்ட நாடாக்கி விட்டிருக்கிறார்கள்” இதன் விளைவுகள், சிங்களவர்களையும் கூட விட்டு வைக்காது என்பதை புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். “அடுத்தவனை நேசிக்கத் தெரிந்தவனாலே தன் மக்களையும் நேசிக்க முடியும்”என்பது எவ்வளவு உண்மை. புத்தசமயம் அதைத் தானே போதிக்கிறது.
Continue Reading →