வாசிப்பும், யோசிப்பும் 221: வரதபாக்கியானின் (புதுவை இரத்தினதுரை) கவிதை ஒன்று: ‘புலிகள் ஆவோம்’

கவிஞர் புதுவை இரத்தினதுரைஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது கவிதைகள் ஈட்டி போல் நெஞ்சினைக் குற்றுபவை. உணர்ச்சிமிக்க உரிமைக் குரலாக ஒலிப்பவை. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் அவருமொருவர். அவரது அரசியற் கருத்துகளுக்கு அப்பால் ஈழத்துத தமிழ்க் கவிதையுலகில் தடம் பதித்த முக்கியமான கவிஞர்களில் அவருமொருவர். முக்கியமான கவிஞர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். அவரைப்பற்றிய எவ்விதத்தகவல்களும் இதுவரை இல்லை. இலங்கை அரசாங்கம் இறுதியில் காணாமல் போனவர்கள் பற்றி வாய் திறப்பதற்கு இறுதியில் புதுவை இரத்தினதுரையின் காணாமல் போதல் வழி வகுக்கலாம். புதுவை இரத்தினதுரையை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவு இலேசாக மறந்து விடப்போவதில்லை. தேசிய அரசியலுக்கு அப்பால் ஈழத்தின் வர்க்க விடுதலைக்காகப்போர்க்குரலாக ஒலித்த அவரது குரலை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவ்வளவு இலேசில் மறந்து விடாது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட ‘குமரன்’ இதழில் நிறைய கவிதைகளை வரதபாக்கியான் என்னும் பெயரில் எழுதியிருக்கின்றார். அவரது அக்காலகட்டத்துக் கவிதைகளினூடாக அவரை அணுகுவது அவரது கவிதைகள் பற்றிய திறனாய்வுக்கு , அவரது போர்ச்சுவாலைகளாகத் திகழ்ந்த கவிதைகளை அறிந்து கொள்வதற்குரிய நல்லதோர் அணுகுமுறை.

Continue Reading →

வாசிப்பும்,யோசிப்பும் 220: முருகபூபதியின் ‘சொல்ல மறந்த கதைகள்’ பற்றி நான் சொல்ல மறக்காத எண்ணங்கள் சில.. –

வாசிப்பும்,யோசிப்பும் 220: முருகபூபதியின் 'சொல்ல மறந்த கதைகள்' பற்றி நான் சொல்ல மறக்காத எண்ணங்கள் சில.. - வ.ந.கிரிதரன் =எழுத்தாளர் முருகபூபதிஎழுத்தாளர் முருகபூபதியின் எழுத்துகளை நான் விரும்பிப்படிப்பவன். குறிப்பாக அண்மைக்காலமாக அவர் எழுதிவரும் கட்டுரைகள் பல காரணங்களினால் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆவணப்பதிவுகளாகவும், இலக்கியச்சிறப்பு மிக்க பிரதிகளாகவும் அவை இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் சிறந்த ஊடகவியலாளராகவும், அதே சமயம் இலக்கியப்படைப்பாளியாகவும் இருப்பதுதான். இதனால்தான் அவரது எழுத்து வாசிப்பதற்குச் சுவையாகவும், அவற்றில் காணப்படும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் பிரமிப்பூட்டுவனவாகவும் இருக்கின்றன. அவரது ‘சொல்ல மறந்த கதைகள்’ தொகுதியினை அண்மையில் வாசித்தேன். தமிழகத்திலிருந்து சிபிச்செல்வனின் ‘மலைகள்’ பதிப்பகத்தினூடு மிகவும் நேர்த்தியாக வெளிவந்துள்ள நூலிது. இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் யுகமாயினி (சஞ்சிகை), உதயம் (இதழ்) ஆகிய இதழ்களிலும், தேனீ இணையத்தளம், அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்தளம் மற்றும் பதிவுகள் இணைய இதழ், நடேசனின் வலைப்பதிவு மற்றும் மேலும் சில இதழ்கள், இணையத்தளங்களில் வெளிவந்ததாகத் தனது முன்னுரையில் மறக்காமல் பதிவு செய்திருக்கின்றார். ‘இலக்கியத்தால் ஒன்றுபடுவோம்’ என்று அம்முன்னுரையினை முடித்திருக்கும் முருகபூபதி மேற்படி நூலினை ‘கொடிய போர்களினால் உலகெங்கும் மடிந்த இன்னுயிர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்’ என்று சமர்ப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்கள் பல் வகையின. முருகபூபதி ஊடகவியலாளராகவிருந்ததால், அரசியல்ரீதியாகவும், இலக்கியரீதியாகவும் அவருக்கு இன, மத, மொழி கடந்து பலருடனும் தொடர்புகள் இருந்திருக்கின்றன, அதனால் பலருடன் அவர் பழகும், பணி புரியும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக வாசகர்களான எமக்கு நல்ல பல அனுபவப் பதிவுகள் கட்டுரைகளாகக் கிடைத்திருக்கின்றன.

Continue Reading →