கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக் கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி என்ற இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை – தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர்.