முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அந்நியர் படையெடுப்பின் காரணமாக சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டது.சங்க காலத்தில் புலால் உண்ணலை வழக்கமாக மேற்கொண்ட மக்கள் காலமாற்றத்தின் காரணமாகவும்,பிற ஆட்சியின் காரணமாகவும்,சமயத்தின் காரணமாகவும் சங்கமருவிய காலத்தில் புலால் உண்ணலை தவிர்க்கும் நெறியினை மேற்கொண்டுள்ளனர். இக்காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு
என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் புலால் உண்ணாமை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இதில் திருக்குறளில் காணப்படும் புலால்மறுத்தல் அதிகாரத்தில் இடம்பெறும் செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.முப்பால் என்பது இதன் பெயர்.உத்திரவேதம்,தெய்வ நூல்,பொய்யா மொழி,வாயுறை வாழ்த்து,தமிழ் மறை,பொதுமறை,திருவள்ளுவப் பயன்,திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் உண்டு.இந்நூலின் ஆசிரியர் வள்ளுவநாயனார், தேவர்,முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், மாதாநுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர்,பொய்யில் புலவன் என்ற வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.அதிகாரம்133 மொத்த குறள்கள் 1330 இவைகள் குறள் வெண்பாவால் ஆனது.அறத்துப்பால் 38 அதிகாரங்களை உடையது.(பாயிர இயல் 4,இல்லறவியல் 20 ,துறவியல் 13 ,ஊழியல் 1 என்ற 4 இயல்களையும் கொண்டுள்ளது)பொருட்பால் 70 அதிகாரங்களை உடையது.(அரசியல் 25 ,அங்கவியல் 32,குடியியல் 13,ஊழியல் 1)காமத்துப்பால் 25 அதிகாரங்களை உடையது.(களவியல் 7 ,கற்பியல் 18 )பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் நூல். மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களைத் தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.