‘மகுடம் (கனடாச்சிறப்பிதழ்)’ எழுத்தாளர் களப்பூரான் தங்கா அவர்கள் மூலம் கிடைத்தது. வி.மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக் கொண்டு , இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றிதழான ‘மகுடம்’ இதழின் ஏப்ரல் – டிசம்பர் 2016 இதழ் கனடாச்சிறப்பிதழாக கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. சிறப்பிதழினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்ததும் விரிவாக என் கருத்துகளைப் பதிவிடுவேன். இதுவரையில் வாசித்த ஆக்கங்கள் பற்றிய கருத்துகளை மட்டும் இங்கு குறிப்பிடுவேன்.
கவிதைகளைப் பிரதீபா , தான்யா, இரா.குணசீலன், களப்பூரான் தங்கா, மாவலி மைந்தன் சி.சண்முகராசா, வல்வைக் கமல், முரளிதரன், த.அகிலன், அமரர் நா.ஜெயபாலன், எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மகனது பிறப்பு பற்றிய அனுபவம் தன்னைக் கவிஞனாக்கிய அனுபவத்தை இரா.குணசீலனின் ‘வயிற்றறுத்து வரும் வம்சங்களுக்காக..’ கவிதை வெளிப்படுத்துகிறது. வல்வைக் கமலின் ‘காணாமல் போனவர்’ கவிதை யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஏழினைக் கடந்த நிலையிலும் , காணாமல் போனவர் இன்னும் திரும்பாத நிலையினை எடுத்துரைத்து நீதி கேட்கின்றது. சர்வதேச மனிட உரிமை அமைப்புகளிடமெல்லாம் முறையிட்டும், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நீதி இன்னும் காணாமல் போய்த்தானுள்ளது என்பதை எடுத்துரைக்கும் கவிதை.
எஸ். லிங்கேஸ்வரனின் ‘எறும்புகள்’ கவிதை வானிலை அறிக்கை எதுவுமேயற்ற சூழலில் எறும்புகள் எவ்விதம் மழை வரப்போவதை அறிந்து ஒளிந்து கொண்டன என வியக்கின்றது. இவ்வகையான அனுபவங்கள் அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படுபவைதாம். சுனாமி ஏற்பட்ட சூழலில் மானுடர் அழிந்த அளவில் மிருகங்கள் அழியவில்லையென்றும், அவை சுனாமி வரப்போவதை உள்ளுணர்வால் அறிந்து , மேட்டு நிலங்களை நாடிச்சென்று தப்பி விட்டன என்றும் கூறக்கேட்டிருக்கின்றேன். அதனையே கவிதை நினைவூட்டியது. சாதாரண மானுட அனுபவமொன்று இங்கே கவிதையாகியிருக்கின்றது. இனிக்கின்றது.