சமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.
பூவிதழும் புனிதமும் (பக்கம் 13) என்ற சிறுகதை பிரிந்து போன காதலின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. தன்னிடம் படித்த மாணவி அமீனாவைக் காதலித்ததற்காக ரானா சேர் அமீனாவின் சகோதரனால் தாக்கப் படுகின்றார். பின் அந்த ஊர் எம்பியின் சூழ்ச்சியால் ரானா சேருக்கு தனது சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைக்கின்றது. அதற்கிடையில் அமீனாவுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகி அவள் கணவனுடன் சிங்கப்பூருக்குச் செல்கின்றாள். ஆனால் அவளது மனதில் ரானா சேர் தன்னை ஏமாற்றிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதான எண்ணம் வலுப் பெறுகின்றது.
பல வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் எதேச்சையாக மலேசியாவில் சந்தித்து தம் சோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமீனாவின் கணவன் விபத்தொன்றில் இறந்துவிட்டதாகவும், அவனது சொத்துக்களில் அமீனாவுக்கு பங்கு கொடுக்காமல் தற்போது அமீனா தாயுடன் வந்து தங்கியிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. தன்னால் அவளது வாழ்வு கருகிவிட்டதை அறிந்த பின்பு ரானா சேருக்கு கவலை மேலிடுகின்றது. அவரும் அதுவரை மணமுடித்திருக்கவில்லை. ஆதலால் மீண்டும் அமீனாவை மணமுடிக்க சம்மதம் கேட்கின்றார். அதற்கு அமீனா கூறும் கூற்றிலிருந்து காதலின் புனிதம் உணர்த்தப்படுகின்றது.