அசோகமித்திரன் நினைவுகள்: தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

அசோகமித்திரன்சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை,  ” அப்பா ரிஷ்க்கா ” என்று சொல்கிறது. உடனே  தகப்பன், ” அது ரிஷ்க்கா இல்லையம்மா…. ரிக்‌ஷா” என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். ” ரி… க்…ஷா…”  குழந்தையும் அவ்வாறே, ” ரி…க்…ஷா…” எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா” என்கிறது.  தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார். ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் “ரிஷ்க்கா” என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது. அப்பொழுது கடைத்தெருவுக்குச் சென்ற மனைவி திரும்பிவருகிறாள். சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். ” பரவாயில்லை, ஒரு  ரிஷ்க்காவில்  போய் எடுத்துவா…” என்கிறார் கணவன். மனைவி திடுக்கிட்டு, ” என்ன சொன்னீங்க…?” எனக்கேட்கிறாள். ” ரிக்‌ஷாவில் போய் எடுத்துவா” எனச்சொன்னேன். ” இல்லை… இல்லை… நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்…!!!” இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன்.  ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம்.

சிறுகதை அரங்குகளில் அசோகமித்திரனின் கதைகளை வாசிப்பதும் நல்ல அனுபவம். அதனை எழுதிய அசோகமித்திரன் கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். ரிக்‌ஷா என்ற அச்சிறுகதையிலிருந்த  உருவ – உள்ளடக்க அமைதியைத்தான் நாம் அசோகமித்திரன் என்ற படைப்பாளியிடமும் அவதானித்தோம். தமிழகப்படைப்பாளிகளின் வரிசையில் அசோகமித்திரன் பற்றியும் எழுதவேண்டும் என்று பல மாதங்களாக நினைத்திருந்தும், அவரது மறைவுக்குப்பின்னரே அது சாத்தியமாகியிருப்பதையிட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன்.

Continue Reading →