ர.சு.நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’
* ‘அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்’ இப்பகுதியில் அக்காலகட்டத்தில் நான் வாசித்த தொடர்கள் பற்றிய விபரங்கள், ஓவியங்கள், அட்டைப்படங்கள் என்பவை நன்றியுடன் பிரசுரமாகும். *
‘கல்கி’ சஞ்சிகை தனது வெள்ளிவிழாவினையொட்டி நடாத்திய நாவல் போட்டியில் முதற்பரிசினை உமாசந்திரனின் ‘முள்ளும் மலரும்’ நாவலும், இரண்டாம் , மூன்றாம் பரிசுகளை ர.சு,நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’, மற்றும் ‘பி.வி.ஆர் எழுதிய ‘மணக்கோலம்’ ஆகிய நாவல்கள் பெற்றன.
‘முள்ளும் மலரும்’ நாவலுக்கு ஓவியர் கல்பனாவும், ‘கல்லுக்குள் ஈரம்’ நாவலுக்கு ஓவியர் வினுவும், ‘மணக்கோலம்’ நாவலுக்கு ஓவியர் விஜயாவும் ஓவியங்கள் வரைந்திருப்பார்கள்.
என் அப்பாவின் கருத்துப்படி முதற் பரிசு பெற்றிருக்க வேண்டிய நாவல் ர.சு.நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’. என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்தும் அதுவே. உண்மையில் ‘முள்ளும் மலரும்’ நாவல் ‘பாசம்’ திரைப்படத்தில் வரும் உப கதையான அசோகன்/கல்யாண்குமார்/ஷீலா கதையின் தூண்டுதலால் உருவானதோ என்று கூட எனக்குச் சந்தேகம் வருவதுண்டு. அது பற்றி இன்னுமொரு சமயம் என் கருத்தினை விரிவாகவே பகிர்வேன்.
உமாசந்திரனின் ‘முள்ளும் மலரும்’ சமூக நாவல். ர.சு.நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’ இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட சமூக, அரசியல் வரலாற்று நாவலென்று கூறலாம். நாவல் இறுதியில் மகாத்மாவின் மரணத்தை மையமாக வைத்து நடைபோடும். நாவலின் பிரதான பாத்திரங்களான ரங்கமணி, திரிவேணி ஆகிய பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.