எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இலங்கையிலிருந்த காலத்திலேயே ‘பூரணி’ சஞ்சிகையின் இணையாசிரியர்களிலொருவராக இருந்தவர். எழுத்தாளர் அமரர் மு.தளையசிங்கத்தின்பால் பெருமதிப்புக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பு என்று பன்முக இலக்கியப்பங்களிப்பாற்றி வருபவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவரது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. சின்னுவ அசுபேயின் ‘Things Fall Apart’ ennum புகழ்பெற்ற நாவலைத் தமிழில் ‘சிதைவுகள்’ என்று மொழிபெயர்த்திருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலது. `ஆடும் குதிரை` (நற்றிணை பதிப்பகம்) `, ‘இரவில் நான் உன் குதிரை’ என்பன இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய குறிப்பிடத்தக்க நூல்கள். இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும், `உள்ளொளி` கவிதத்தொகுப்பு `காலம்` சஞ்சிகை வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. கனடாவிலிருந்து மாதாமாதம் வெளியாகும் டிலீப்குமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘தாய்வீடு’ பத்திரிகையில் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வருகின்றார்.
இவர் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார். இவர் இலக்கிய அமர்வுகளைத் தலைமையேற்று நடாத்துவதற்கு மிகவும் பொருத்தமான படைப்பாளிகளொருவர். கலை, இலக்கியம் பற்றிய இவரது கருத்துகளில் தத்துவார்த்தரீதியில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் , அவற்றையும் மீறி இவரது இலக்கியப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. விதந்தோடப்பட வேண்டியது.