வாசிப்பும், யோசிப்பும் 241: நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள்: எழுத்தாளர் நந்தினி சேவியர்

எழுத்தாளர் நந்தினி சேவியர்!அண்மைக்காலமாக எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூற் பதிவுகளை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அதிகமான இவரது முகநூல் பதிவுகள் இவரது கலை, இலக்கியம் மற்றும் சமூக நீதி, பொதுவுடமை சமுதாய அமைப்பு ஆகியவை பற்றிய, ஆளுமைகள் பற்றிய விமர்சனக் குறுங்குறிப்புகளாக அமைந்திருக்கின்றன. இலங்கை அரசின் சாகித்திய விருது, கொடகே அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர்.


இவரது படைப்புகள் பலவற்றை நான் இன்னும் விரிவாக வாசிக்கவில்லை. ஆயினும் அவற்றை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன இவரது முகநூற் குறிப்புகள். இவரது முகநூற் குறிப்புகள் மூலம் நான் இவரைப்பற்றி அறிந்து கொண்ட இவரது ஆளுமை பற்றிய பிரதான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:


1. மானுட சமூக விடுதலைக்காக இவர் வரித்துக்கொண்ட கோட்பாடு மாரக்சியக் கோட்பாடு. இலங்கையில் சீனசார்புக் கம்யூனிச அமைப்பினூடு, மானுட சமூக, பொருளாதார விடுதலைக்காக, கட்சியில் இணைந்து செயற்பட்ட இலக்கியப்போராளிகளிலொருவர் இவர். இவ்விடயத்தில் , தான் பின்பற்றும் கோட்பாடு விடயத்தில் இவர் மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீண்டாமை போன்ற சமூகப்பிரச்சினைகளுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியொன்றினூடு இணைந்து போராடுவதே ஒரே வழி என்பதில், வர்க்கப்போராட்டமே ஒரே வழி என்பதில் உறுதியாக இருக்கின்றார். இந்த அடிப்படையில் இவர் அரசியல் ஸ்தாபனங்களைப்பற்றி, ஆளுமைகளைப்பற்றித் தன் விமர்சனங்களை முன் வைக்கின்றார்.


2. அடுத்த இன்னுமொரு விடயம். இவர் யாருக்காகவும் தனக்குச் சரியென்று பட்டதை எடுத்துரைக்கத் தயங்குவதில்லை. தான் தெளிவுடன் அணுகும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தன் வாதங்களை ஆணிதரமாக முன் வைப்பவர் இவர்.


3. தன் தனிப்பட்ட உடல்நிலை, பொருளியல் நிலை போன்ற விடயங்கள் தன் கலை, இலக்கியச் செயற்பாடுகளை, எண்ணங்களைத் திசை திருப்பி விடாதவாறு பார்த்துக்கொள்கின்றார்.


4. முகநூலை ஆக்கபூர்வமாகத் தொடர்ச்சியாகப் பாவித்துத் தன் எண்ணங்களை எடுத்துரைத்து வருகின்றார்.


5. கடந்த காலக் கலை, இலக்கிய மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகளை அவ்வப்போது இவ்விதமான குறிப்புகள் மூலம் பதிவு செய்வதோடு, அவை பற்றிய தன் விமர்சனங்களையும் முன் வைக்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 240 : தேவை அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் முப்பது; ;புறம் கூறுதல் பற்றி….

தேவை அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் முப்பது.

'மனக்கண்' நாவலிலிருந்து..1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த , அறிஞர் அ.ந.கந்தசாமியின் நாவல் ‘மனக்கண்’. இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களிலொன்று. அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: சுவையாகப் பின்னப்பட்ட கதை, அ.ந.க.வின் துள்ளுதமிழ் மொழி நடை மற்றும் நாவலில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தகவல்கள். இந்நாவல் பற்றி விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கின்றேன். அது ‘ழகரம்’ சிறப்பிதழில் மற்றும் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php…

இந்நாவலுக்கு நாவல் பற்றிச் சிறப்பானதொரு ஆய்வுக் கட்டுரையினையும் அ.ந.க எழுதியுள்ளார்.
அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலைப் ‘பதிவுகள்’ இணைய இதழிலிலுள்ள அ.ந.க பக்கத்தில் வாசிக்கலாம்: அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/index.php…

மேற்படி ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் முப்பது இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. அதனை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்நாவல் தொடராகத் தினகரனில் வெளியாகியபோது தொடராக நாவலைச் சேகரித்து யாராவது வைத்திருந்தால் அந்த அத்தியாயத்தை எமக்குத் தந்தால் நன்றியாகவிருப்போம். மே 31, 1967 தினகரன் பத்திரிகையில் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் 29 வெளியாகியுள்ளது. ஜூன் 13, 1967 தினகரன் பத்திரிகையில் அத்தியாயம் 31 வெளியாகியுள்ளது. ஆக, அத்தியாயம் 30 மே 31 , 1967 – ஜூன் 13, 1967 காலகட்டத்தில் வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருக்க வேண்டும்.

இந்த அத்தியாயத்தை எற்கனவே இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் தேடிப்பார்த்திருக்கின்றோம். ஏனைய அத்தியாயங்களையெல்லாம் அங்கிருந்து பெற முடிந்தது. இதனை மட்டும் பெற முடியவில்லை.

யாராவது இலங்கை லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு , இந்த அத்தியாயத்தைப் பெற்றுத்தந்தால் அவ்வுழைப்புக்குரிய சன்மானம் வழங்கவும் தயாராகவிருக்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com.

Continue Reading →

அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’! – செ.கணேசலிங்கன்

– அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகம் ‘எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது –


மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமிசெ.கணேசலிங்கன்விழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச்சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வாளர் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. ‘கூத்தாட்டவைக் குழாத்தற்றே” என்றார் வள்ளுவர்.

சிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். “பாட்டிடையிட்ட உரைநடையாக” காவியம் அமைத்திருப்பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.

இன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் – கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 – 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 239 : நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள் – எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும்எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இலங்கையிலிருந்த காலத்திலேயே ‘பூரணி’ சஞ்சிகையின் இணையாசிரியர்களிலொருவராக இருந்தவர். எழுத்தாளர் அமரர் மு.தளையசிங்கத்தின்பால் பெருமதிப்புக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பு என்று பன்முக இலக்கியப்பங்களிப்பாற்றி வருபவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவரது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. சின்னுவ அசுபேயின் ‘Things Fall Apart’ ennum புகழ்பெற்ற நாவலைத் தமிழில் ‘சிதைவுகள்’ என்று மொழிபெயர்த்திருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலது. `ஆடும் குதிரை` (நற்றிணை பதிப்பகம்) `, ‘இரவில் நான் உன் குதிரை’ என்பன இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய குறிப்பிடத்தக்க நூல்கள். இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும், `உள்ளொளி` கவிதத்தொகுப்பு `காலம்` சஞ்சிகை வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. கனடாவிலிருந்து மாதாமாதம் வெளியாகும் டிலீப்குமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘தாய்வீடு’ பத்திரிகையில் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வருகின்றார்.

இவர் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார். இவர் இலக்கிய அமர்வுகளைத் தலைமையேற்று நடாத்துவதற்கு மிகவும் பொருத்தமான படைப்பாளிகளொருவர். கலை, இலக்கியம் பற்றிய இவரது கருத்துகளில் தத்துவார்த்தரீதியில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் , அவற்றையும் மீறி இவரது இலக்கியப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. விதந்தோடப்பட வேண்டியது.

Continue Reading →

கணினித்தமிழ்: (தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் குறித்த செய்திகளை அறிய உதவும் நூல்)

கணினித்தமிழ்: (தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் குறித்த செய்திகளை அறிய உதவும் நூல்) இந்தியா பல்வேறு மொழியினைப் பேசுபவர்களைக் கொண்ட நாடாக இருப்பதால், அனைத்து மொழி பேசுபவர்களும் அறிந்து கொள்வதற்கேற்றதாக ஆங்கில மொழியைத் தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நிர்வாகம், துறைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்திற்கும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் தங்களுடைய வணிகப் பயன்பாட்டுக்கு ஆங்கில மொழியையே அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆங்கில மொழியே முதன்மைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், உலகின் பல்வேறு செயல்பாடுகள் ஆங்கில மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகில் அனைவரும் பயன்படுத்தி வரும் புதிய ஊடகமான இணையத்திலும் ஆங்கில மொழியே முதலிடத்தில் இருக்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் தாய்மொழி மேல் பற்று கொண்டவர்கள் கணினி மற்றும் இணையப் பயன்பாட்டில் ஆங்கில மொழியைத் தவிர்த்துத் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தத் தேவையானவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படித் தமிழ் மொழியும் இணையப் பயன்பாட்டில் மிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இணையத்தில் தமிழ் மொழியினைக் கொண்டு வருவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர்.

கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் எப்போது தொடங்கியது? அதில் யாரெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளையும், இணையத்தில் தமிழ் மொழியில் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கி ஏதாவது நூல் ஒன்று வெளியாகாதா? என்று புதிய தமிழ் இணையப் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டுவில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வரும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் கரூர் மாவட்டம், மாயனூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் த. வானதி ஆகியோர் இணைந்து “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்” எனும் நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

Continue Reading →

சுகுமாரன்: கவிதையின் இரு தளங்களிலான பயணத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமை!

– 2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளதையொட்டி வெளியாகும் கட்டுரை இது. –

1.
சுகுமாரன்‘தினமணி கதி’ரில் எழுதத் தொடங்கிய காலத்தில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் மூலமாக தொடர்பேற்பட்ட முக்கியமான நண்பர்களில் ஒருவர் ராஜமார்த்தாண்டன். எனக்கும் அவருக்குமிடையில் இணைவான பழக்கங்களும், இலக்கிய ஆர்வங்களும் இருந்தவகையில் அந்தத் தொடர்பு மேலும் விரிவு கண்டது. ராயப்பேட்டை நாகராஜ் மேன்சனில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த காலப் பகுதியில், அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் சந்திப்பதாக அது வளர்ந்திருந்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற நிறப்பிரிகை சார்பான புதுமைப்பித்தன் கருத்தரங்கில் இருவரும் ஒன்றாகவே சென்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோம். இவை இன்னொரு நெருங்கிய வட்டத்தில் எம்மை இழுத்திருந்தன. அக்காலத்தில் ராஜமார்த்தாண்டன் மூலமாக அவரது நண்பராக எனக்கு அறிமுகமான பெயர்தான் கவிஞர் சுகுமாரன். சில ஞாயிறுகளில் சுமுமாரனும் வரவிருப்பதாக ராஜமார்த்தாண்டன் சொல்லியபோதும், என்றைக்கும் அவரை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. நிறைய எழுதுகிறவரில்லை சுகுமாரன். அவரின் எழுத்தின் ஆழங்களால் இன்னுமின்னும் காணுதலின் விழைச்சல் அதிகமானபோதும், 2003இல் நான் இந்தியாவைவிட்டு புறப்படும்வரை அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் என்னை எட்டவேயில்லை. நாகர்கோவில் காலச்சுவடு தலைமை அலுவலகத்தில் 2014இல் அவரைக் காணவும் பேசவுமான முதல் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே, அவரது பெரும்பாலான நூல்களை நான் வாசித்திருந்தேன். அறிமுகப் படுத்தாமலே இருவரும் அறிமுகமாகியது அந்த ஆரம்பத்தின் முக்கியமான அம்சமெனக் கருதுகிறேன்.

2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்ட சில நாள்களில், மீண்டும் அவரது கவிதைகளையும், உரைக்கட்டுத் தொகுப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க உந்துதல் ஏற்பட்டது.  கவிஞராக, உரைக்கட்டாளராக, பத்தி எழுத்தாளராக, விமர்சகராக, நாவலாசிரியராக, இதழியலாளராக, மொழிபெயர்ப்பாளராக, சினிமா ஆர்வலராக,  தொலைக்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுத்துறைகளில் பணியாற்றியவராக பல்வேறு அம்சங்களில் அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்திருப்பதை அப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

Continue Reading →

ஐரோப்பியப்பயணத்தொடர் (4): “லந்தினியம்” எனும் “லண்டன்”

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் நான்காவது  அத்தியாயம் ‘“லந்தினியம்” எனும் “லண்டன்” என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


அத்தியாயம் நான்கு:    “லந்தினியம்” எனும் “லண்டன்”

ஒருவன் லண்டன் வாழ்க்கையில் சலிப்புற்றானாகில், அவனது சொந்த வாழ்க்கையிலேயே   சலிப்புற்று விட்டான் என்று பொருள். (When a man is tired of London, he is tired of life  – Samuel Johnson – )

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்தமிழ் நாட்டின் அக்கினிமழையில் இருந்து தப்பி தோகா செல்லும் விமானத்தில் ஜில்லெனக் குளிர் சூழ ஆரம்பித்ததும் உறக்கத்தின் கடவுள் நம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். சின்ன தலையணை மற்றும் சிறிய சால்வை இருக்கும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும். அதை வைத்துக்கொண்டு நன்கு தூங்கலாம். இடையிடையே சாப்பிட குளிர்பானங்கள் அல்லது காபி டீ என கொடுப்பார்கள். நம் இருக்கையின் முன் உள்ள சின்ன மானிட்டர் பெட்டியில் சினிமா படங்கள் தமிழ் படம் உட்பட (ஆனால் குறிப்பிட்ட ஒரு சில படங்கள் மட்டும் – அதில் முக்கியமானது கபாலி), பிற மொழிப் படங்கள், கணினி விளையாட்டு என அனைத்தும் இருக்கும். காதில் ஒரு ஹியர் போன் மாட்டிக்கொண்டு அதைப் பார்க்கலாம். அது வேண்டாம் எனில் ஏரோபிளான் மோட் என்று ஒரு பகுதி இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்தால் விமானம் பயணம் செய்யும் பாதை, எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது, எந்தக் கடல் மீது மற்றும் ஊரின் அருகே உள்ளது என விமானத்தின் பல கோண படங்களுடன் தகவல்களை நாம் பார்க்கலாம் கடைசி வரை. இடையில் நம்மூரில் விளம்பரங்கள் காட்டுவது போல் தோகாவில் உள்ள  ஹமாத் பன்னாட்டு விமான நிலையத்தின் சிறப்புகள் பற்றி சிறிய ஒரு படம் காண முடிந்தது. அந்த விளம்பரத்திலேயே அந்த விமான நிலையத்தின் பிரமாண்டம் தென்பட்டது. எனக்கு சிறு ஆறுதல். சரி! ஆறு மணி நேரம் நன்கு இந்த விமான நிலையத்தைச் சுற்றி பார்க்கலாம். என முடிவு செய்து கொண்டேன்.

இவ்வாறாகப் பாதி  உறங்கியும் பாதி தூங்கிய பிரமையிலும் பிரயாணம் செய்து காலை குறித்த நேரத்தில் தோகா வந்தடைந்தோம். விமானப்பயணம் சுகமான ஜில் தட்பவெப்பத்தில் இருந்ததால் ஒரு குறையும் தெரியவில்லை. விமானம் விட்டு வெளியேறி, விமானநிலையம் உள்ளே செல்ல மின்சார ஏறுபடிகளில் மற்ற பிரயாணிகளுடன் ஏறிக்கொண்டிருந்த எங்களுக்க்கோர் அதிர்ச்சி காத்திருந்தது. படிகளுக்கு மேலே ஒரு கத்தார் விமான சேவையைச் சேர்ந்த பெண் ஊழியர் கையில்  அட்டையொன்றில் “லண்டன்” எழுதி அனைத்து பயணிகளுக்கும் கண்ணில் படும் விதமாக வைத்துக்கொண்டு இருந்தார். கூடவே “லண்டன் செல்லும் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

Continue Reading →

ஆய்வு: கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடுகள் (நான்காம் நிலை)

- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் யாத்த நூல்  தொல்காப்பியம். தமிழ்மொழியின் காலத்தொன்மை பண்பாடு, நாகரிகச் சிறப்பு முதலியவற்றை நுவலும் முதன்மை ஆதாரமாக இந்நூல் திகழ்கிறது. உலகில் தோன்றிய இனங்களில் பொருளுக்கு இலக்கணம் வகுத்தது தமிழினமாகும். ஏனைய மொழிகள் யாவும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கண்டுள்ள நிலையில் தமிழ்மொழி, பொருளை அகவாழ்வு என்றும், புறவாழ்வு என்றும் வரையறுத்து வாழ்வை நெறிப்படுத்தியது. இவ்வகவாழ்வு களவு, கற்பு என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இக்களவுக்கால மெய்ப்பாடுகளுள்  ஒன்றான நான்காம் நிலைக்குரிய மெய்ப்பாடுகளைக் கலித்தொகையில் பொருத்திப் பார்ப்பதாகக் இக்கட்டுரை அமைகின்றது.

மெய்ப்பாடு
உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடே மெய்ப்பாடு ஆகும். இளம்பூரணர், “மெய்ப்பாடென்பது புலன் உணர்வின் வெளிப்பாடு. அது மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று” என்பர்.

அகத்திணை  மெய்ப்பாடுகள்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப    ”      (தொல்.பொருள்.அகத்.நூ.1)

என்றவாறு, அகத்திணைகளைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று மூன்றாகப் பகுப்பது தமிழ் மரபு. கைக்கிளை என்பது ஒரு தலை வேட்கை பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; ஆதலின் ஒத்த அன்புடைய ஐந்திணையே சிறந்தது என்பதால் இதனை நடுவணைந் திணைக்குள் அடக்குகிறார் தொல்காப்பியர். அகவாழ்வில் களவு, கற்பு என்ற இருநிலைகள் உள்ளன. களவுக் காலத்திற்கு உரியனவாக 24 மெய்ப்பாடுகளையும், கற்புக் காலத்திற்கு உரியனவாக 10 மெய்ப்பாடுகளையும்  தொல்காப்பியர் பாகுபடுத்தியுள்ளார்.

களவுக்கால மெய்ப்பாடுகள்
நல்லூழின் ஆணையால் காதலர் இருவர் தம்முள் கண்ட காட்சி, வேட்கை, இருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லாம் அவையே  போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என அவர்தம் உணர்வு நிலைகளைப் பத்தாகப் பகுப்பது மரபு. இவற்றை வடநூலார் அவத்தை என்பர். இவற்றில் முதல் ஆறு உணர்வு நிலைகள் மட்டும் மெய்ப்பாட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு  நிலைகளுள் முதல் மூன்று நிலைகள் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும், அடுத்த மூன்று நிலைகள் புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.

Continue Reading →

கவிதை: முடிவில்லாக் காலங்களின் இருள்

- துவாரகன் -

நீண்ட கோடாக இருள்.
வலிய காந்த இழுப்பில்
ஒட்டிக்கொள்ளும்
துருப்பிடித்த இரும்புத் துகள்களாக.

திருகிப் பூட்டப்பட்ட தண்ணீர்க் குழாயிலிருந்து
ஓரிடைவெளியில்
விட்டுவிட்டுச் சொட்டிக்கொண்டிருகிறது வாழ்வு.
அங்கு எல்லையற்ற
பாலைவெளியாக நீள்கிறது இருள்.

Continue Reading →