“மன நலம் மன்னுயிர்க் காக்கம்” என்கிறார், வள்ளுவர்.
மனநலம் என்பது மனநலப் பிரச்சினை இல்லாதநிலை எனப் பொருள்படாது. வாழ்க்கையை அனுபவிக்கவும் அதன் சவால்களுக்கு முகம் கொடுக்கவும்கூடிய ஒரு திறனே மனநலம் ஆகும். தனிப்பட்ட ஆளுமை, சூழல் மற்றும் சமூக, பொருளாதாரக் காரணிகள் ஒருவரின் மனநலத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. உணர்ச்சிகளைக் கையாளக்கூடிய திறனும், சமூகத் தொடர்புகளும் மனநலத்தைப் பேணுவதற்கு ஒருவருக்கு அவசியமானவையாக இருக்கின்றன. ஒருவருடைய நல்வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது ஒருவரால் கையாள முடியாத ஒரு நிலைமை stress அல்லது மன அழுத்தம் எனப்படுகிறது. தேவைக்கும் இருப்புக்கும் இடையிலுள்ள சமனின்மை அல்லது கையாளக்கூடிய திறனை மீறிய ஒரு நிலையே – மன அழுத்தம் என்கிறார், உளவியலாளர் – Richard S. Lazarus.
அச்சுறுத்தல் அல்லது அபாயம் ஒன்றிருப்பதாக ஒருவர் உணரும்போது, மன அழுத்தம் அவரது உடலின் இயல்பான எதிர்வினையாக அமைகிறது. உடல் வலி, துன்புறுத்துகின்ற ஒரு நெருங்கிய உறவு போன்ற வெளிப்புறக் காரணியாகவோ அல்லது நோய், பதற்றம் போன்ற உள்புறக் காரணியாகவோ அது இருக்கலாம். அந்நிலையில், அதிரினலீன், கோட்டிசோல் எனப்படும் இரசாயனப் பொருள்களை உடல் அதிகளவில் சுரக்கிறது. அவை அதிகரித்த இதயவடிப்பு, வியர்வை, இறுகிய தசைகள் என்பவற்றை விளைவாக்குகின்றன. அந்த அபாயகரமான அல்லது சவாலான நிலைக்கான பதிலளிப்பை மேம்படுத்துவதற்கு இந்தச் செயல்கள் யாவும் உதவுகின்றன.
உதாரணத்துக்கு வீதியைக் கடந்துகொண்டிருக்கும்போது கார் ஒன்று வேகமாக வருகிறது எனில் அது எங்களைக் காயப்படுத்தலாம் என்ற எங்களுடைய சிந்தனை, பயம் என்ற உணர்ச்சியை வரவழைக்க, சுரக்கப்படும் அந்த ஓமோன்கள் பதற்றமும் பரபரப்புமாக அவ்விடத்தை விட்டு உடனே வேகமாக ஓடுவதற்கான செயலாக்கத்தை எங்களில் விளைவாக்குகின்றன. இங்ஙனம். ஏதோ ஒருவகையில் எங்களில் மன அழுத்தத்ததை ஏற்படுத்தக்கூடிய ஒரு தூண்டியை நாங்கள் அனைவருமே அடிக்கடி சந்திக்கின்றோம். அது நேரமின்மையால் அல்லது முயற்சி பயன் அளிக்காமையால் உருவானதாகதாகவோ அல்லது உறவுப் பிரச்சினையால் அல்லது உரிமை கோரல் போராட்டத்தால் ஏற்பட்டதாகவோ இருக்கலாம்.
இந்தச் சிந்தனை, உணர்ச்சி, செயல் என்ற மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்பில் இயங்குகின்றன. சிந்தனை, உணர்ச்சி அல்லது செயலுக்குக் காரணமாகலாம்; அதே போல உணர்ச்சி, சிந்தனை அல்லது செயலுக்குக் காரணமாகலாம்; செயல், சிந்தனை அல்லது உணர்ச்சிக்குக் காரணமாகலாம்.