ஆய்வு: பாவையும் பாவையும்“ (ஆண்டாளும் திருப்பாவையும்)

முனைவர் செல்வகுமார்முன்னுரை
‘பாவையும் பாவையும் என்னும் இருசொற்களும் எவற்றைக் குறிக்கின்றன? இரண்டு சொற்களும் சொல்லளவில் ஒன்றே. எனினும் இங்குப் பொருளளவில் வேறு வேறு ஆகும். ஆண்டாளும் திருப்பாவையும் என அடைப்புக் குறிக்குள் தந்திருப்பதால் முதலில் இருப்பது ஆண்டாளைக் குறிக்கும். அடுத்தது திருப்பாவை என்னும் நூலினைச் சுட்டும் எனலாம்.

‘பாவை’ என்னும் சொல்லுக்குப் பொருள் பொம்பை. பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளமகளிர் விளையாடுதல் பண்டைய வழக்கம். உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறிப்பதும் உண்டு. ‘இது என்பாவை, பாவை இது என’ எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில் ‘பாவை’ என்பது பெண்ணையும், பொம்மையையும் முறையே சுட்டுதல் அறியத்தகும்.

சாதாரணமானவர்களைக்காட்டிலும் முனிவர்கள் உயர்ந்தவர்கள்; அவர்களை விட ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்; அவர்களுள்ளும் பெரியாழ்வார் உயர்ந்தவர்; அவரையும் விஞ்சி உயர்ந்து நிற்பவர் ஆண்டாள் என்பது சுவாமி பெரியவாச்சான் பிள்ளை கருத்து.

1. பாவை (ஆண்டாள்) வரலாறு:
விஷ்ணுசித்தர் தமது நந்தவனத்தில் துளசிச்செடியின் கீழ்க் கண்டெடுக்கப்பெற்ற பெண் குழந்தைக்குக் கோதை எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். அவரே பெரியாழ்வார். செல்வமாக வளர்ந்த குழந்தை திருமால் மீது மால் கொண்டு அவனையே மணாளனாக வரித்துக்கொண்டது. பெரியாழ்வார் மலர்மாலை கொடுத்துத் திருமாற்குச் சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர். கோதையானவள் இறைவனுக்காகத் தொடுக்கப்பட்ட மாலையைத் தான் அணிந்து, பெருமானுக்குத் தானேற்றவள்தானோ என்று நோக்கிப்பின் அளிப்பது வழக்கம். இச்செய்தியாராய்ப் பெரியாழ்வார் அதனை இறைவற்குச் சூட்டிவந்தார். ஒருநாள், தன்மகளின் அடாத செயலைக் கண்டு வெகுண்டு, வேறு மாலை தொடுக்குமாறு செய்து, இறைவற்குப் புனைய, இறைவன் இரவில் அவரது கனவில் தோன்றி அவள் அணிந்து விடுத்த மாலையே தனக்கு மகிழ்ச்சி விளைப்பதாகக் கூறினான். பெரியாழ்வாரும் அவ்வாறே அம்மாலையையே அளித்து வந்தார். இது காரணமாக ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்தவள் என்ற பெயர் எய்தியது. இவள் மணப்பருவம் அடைந்தவுடன் பிறர் எவரையும் மணக்க எண்ணம் இன்றித் திருவரங்கப் பெருமாற்கே தான் உரியவள் எனக் கூறிவந்தாள். இவ்வாறு அவள் கருதியதற்கு அவளது அருளிச் செயல்களிலேயே அகச்சான்றுகள் காணலாம். அவளுடைய தந்தை பலபட முயன்றும் அவட்கு மணமுடிக்கக் கூடவில்லை. திருவரங்கப் பெருமான் கட்டளையின் பேரில், ஆண்டாளம்மையைத் திருவரங்கத் தலத்திற் கொண்டு சேர்த்ததாகவும் அங்கே அவள் இறைவனை அடைந்ததாகவும் வரலாறு கூறும். ஆண்டாள் திருநட்சத்திரம் : ஆடிப்பூரம்.

2. ஆண்டாள் காலம்
திருப்பாவைப் பதின் மூன்றாம் பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஒரு தொடர் உள்ளது. அதிகாலை வேளையில் கிழக்கே வெள்ளி மேலெழுந்து மேற்கு வானில் வியாழன் மறைந்த நிகழ்ச்சியானது கணித நூற்கணக்கின்படி 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் நான்குமுறை நிகழ்ந்ததாகவும் அவற்றுள் கி.பி.731இல் மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் (மார்கழிப் பௌர்ணமியன்று) வெள்ளி எழுச்சியும் வியாழன் வீழ்ச்சியும் நிகழ்ந்தன எனவும் வரையறை செய்யப்படுகிறது. எனவே ஆண்டாள்காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.

Continue Reading →

கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாதாம்! கூடாதா?

கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாதாம்! கூடாதா?கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாது என்பது ஒரு முழு மூடநம்பிக்கை. இதை ஆதரிக்க சரியான  காரணத்தை எவராலும் கூறமுடியாது. இந்த மூடநம்பிக்கையை வலுவாக நடைமுறைப்படுத்தவே கோவிலில்  உள்ள பிற கல்வெட்டுகளை புடைய்ப்புத்தூண் சிற்பங்களைக் கூட  படம் பிடிக்கக் கூடாது என்று சட்டத்திற்கும்  மக்கள் உரிமைக்கு புறம்பாக தடை போடுகிறார்கள். அதேநேரம் சில கோயில் நிர்வாகத்தார் விரும்பினால்  உரூ.50/- அல்லது 100/-  பெற்றுக் கொண்டு படம் பிடிக்க அனுமதிக்கிறார்கள். இதுவே இந்த நம்பிக்கையில் விழுந்த ஓட்டை தான். கோவிலில் படம்பிடிக்கக் கூடாது என்பதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில் எந்த சட்ட பிணிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை.  உன் வீட்டில் எவரேனும் படம்பிடிக்க அனுமதிப்பாயா? அப்படித் தான் கோவிலும் என்கின்றனர். இதை ஆழ்ந்து சிந்திக்கும் கால் கோவில் என்பது வீடு போல அகம் (personal) சார்ந்த  முறையல்ல. அது ஒரு பொது முறை. மேலும், உற்பத்தி ரகசியம் சார்ந்த தொழிற்சாலையில்  படம்பிடித்தால் உற்பத்தி இரகசியம் வெளியாகிவிடும் என்ற நிலையும் இல்லாதது   கோவிலென்பது. மாறாக மக்களின் பக்தி உணர்வு, பண்பாட்டு உணர்வு, வரலாற்று உணர்வு ஆகியவற்றால் பின்னிப்பிணைந்து தான கோவில் என்ற அமைப்பு. ஆகவே மக்கள் தம்மை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ள அங்கு படம் பிடித்துக்கொள்ளவே விரும்புவர்.

இப்படி எல்லாம் சொன்னாலும் கோவில் பூசகர்கள் கோவில் கல்வெட்டுகளில் எங்கெங்கே அரசர்கள் தங்கம், வைரம் போன்ற விலைமதிக்க முடியாத பொருளை  எங்கே சேமித்து வைத்திருக்கின்றனர் என்று கல்வெட்டாக வடித்துள்ளனர். அதை படித்து சிலர் அவற்றை கவரக்கூடும். நாம் நமது பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும். எனவே கல்வெட்டுகளை படம்பிடிக்க அனுமதிக்க முடியாது எனற பொய்க் கருத்தை பரப்புகின்றனர். இந்திய தொல்லியல் துறை மாநில தொல்லியல்;துறை ஆகியன ஏற்கனவே கல்வெட்டுகள் பற்றி பல நூல்களை வெளியிட்டுள்ளனர்  பொக்கிஷம் திருடுவோர் அவற்றை படிக்காமலா இருப்பார்கள். எனவே  கல்வெட்டுகளால் நாட்டின் பழங்கால பொக்கிஷங்களுக்கு ஆபத்து என்பது ஒரு முழு கற்பனை.

Continue Reading →