வாசிப்பும் யோசிப்பும் 279: பால்ய காலத்து அழியாத கோலங்கள் – ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’

ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் ‘பொன்மலர்’. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் ‘பார்வதி பி.ஏ’ இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்’.
ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’.
மாயாவியின் ‘வாடாமலர்’
ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’
சாண்டில்யனின் ‘ஜீவபூமி’
சாண்டில்யனின் ‘உதயபானு’ & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் ‘உயிரோவியம்’
அகிலனின் ‘சிநேகிதி’
பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார் கதைகள்’
விந்தனின் ‘பாலும் பாவையும்’
கலைஞர் கருணாநிதியின் ‘வெள்ளிக்கிழமை’
அறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’
மு.வ.வின் ‘அந்த நாள்’
சி.ஏ.பாலனின் ‘தூக்குமர நிழலில்’
குரும்பூர் குப்புசாமியின் ‘பார் பார் பட்டணம் பார்’
மாயாவியின் ‘வாடாமலர்’
லக்சுமியின் ‘காஞ்சனையின் கனவு’ & ‘பெண்மனம்’

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.

ராணிமுத்து பிரசுரங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களாக ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’யும், சாண்டில்யனின் ‘ஜீவபூமி’யும் விளங்கின.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை ஃபூக்கோதொல்காப்பியத்தின்படி தலைவன் – தலைவி மறைவாக ஒழுகும் களவு ஒழுக்கத்தை வரையறுப்பதே களவு இலக்கியக்கொள்கையின் வேலை. அத்தகைய களவில் தலைவனுக்குச் சார்பாக இயங்கும் பாங்கன், தலைவிக்குச் சார்பாக இயங்கும் தோழி இடம்பெற்றிருப்பது பொருத்தமுடையது. களவு ஒழுக்கத்திற்கு எவ்வகையிலும் சார்பாக இயங்காத செவிலி, நற்றாய் பாத்திரங்கள் களவில் ஏன் இடம்பெற்றிருக்கிறது? களவுக்குப் பொருத்தமற்ற செவிலி, நற்றாய் இருவரில் நற்றாய் குடி பொறுப்பிற்கு உரிமையானவள்; செவிலி தலைவியின் குடிச்செயலைப் பின்பற்றி தலைவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருப்பவள். குடிசார்ந்து நேரடி உரிமையைப் பெற்றிருப்பதால் களவுக்குப் பொருத்தமற்ற நற்றாய் பாத்திரம் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இவ்ஆய்வுக் கட்டுரைக்கு ஃபூக்கோவியல் சிந்தனை கருவியாகக் கொள்ளப்படுகிறது. காரணம் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படுகிற இடத்தில் மாறிய பொருளுக்கும் மாற்றப்படுகிற பொருளுக்கும் இடையில் நடந்தவற்றைக் குறித்த ஆராய்ச்சியில் மிகுகவனம் செலுத்தியது ஃபூக்கோவியல் சிந்தனை. ஃபூக்கோ உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய ஒரு பொருள் குறித்த ஆராய்ச்சியை அவ்வரலாற்றின் பின்னணியில் ஆராய்பவர். ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட இலக்கியவிதிகள் மொழியாலான ஒரு பொருள். அது இலக்கியவிதிகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே பூக்கோவியல் சிந்தனையைக் களவில் வைத்து விளக்க இடமுண்டு. மேலும் இங்குக் களவு கற்பாக மாற்றப்பட்டதற்கு இடையில் நற்றாயின் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. அதற்குரிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதற்கு முன் ஃபூக்கோவியல் சிந்தனையில் கட்டுரையை விளக்குவதற்குப் பயன்படக்கூடிய பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.

ஃபூக்கோவிய அதிகாரச் சிந்தனை
ஃபூக்கோவிய அதிகாரம் (Power) என்பது இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கின்ற ஒருவர்/ஒன்று மற்றொருவர்/மற்றொன்று மீது செலுத்துகிற ஆதிக்கம் சார்ந்த ஆற்றல் அல்ல. சமூகம் உறவுகளால் ஆனது. அந்த உறவுகள் ஒவ்வொரு கணப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கம் ஒன்று மற்றொன்றை மாற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தை நிகழ்த்துகிற ஆற்றலை ஃபூக்கோவியல் அதிகாரம் என்ற சொல்லால் குறிக்கிறது. ஃபூக்கோவிய “அதிகாரம் ஒரு நிறுவனம் அல்ல, மற்றும் ஒரு அமைப்பும் அல்ல…. அது ஒரு பெயர்” (Foucault,1998:93). அதிகாரம் தன்னிச்சையான இயக்கம் கொண்ட ஒரு பொருள் அல்ல. உறவுகளுக்குள் இருந்துகொண்டு அதனை இயக்கிக்கொண்டு இருக்கிற ஒன்று. உறவுகள் இல்லாமல் ஆகிறபோது அதிகாரமும் இல்லாமல் ஆகிவிடும்

ஆற்றலால் அமைந்த உறவுகள் அதிகார உறவுகளாகும் (Power relations). அதிகாரம் உறவுகொள்ளும்போதுதான் மாற்றம் நிகழ்கிறது. இங்கு ஒரு கேள்வி எழும். அது மாறுகிற செயல் ஆற்றலற்றதா? என்பதாகும். மாறுகிற செயல் ஆற்றலற்றது இல்லை. மாறாகக் குறைவான ஆற்றல் கொண்டது. அதாவது பயிற்சி பெறுகிற இடத்தில் இருப்பது. அதேசமயம் பயிற்சி பெறுகிற அதிகாரம் இல்லாமல் மாற்றியமைக்கிற அதிகாரம் இல்லை. “அதிகாரம் இங்கோ அங்கோ இடமாக்கப்பட்டது இல்லை” (Foucault,1980:98) என்பது சுட்டத்தக்கது. “அதிகார உறவுகள் உள்நோக்கம் மற்றும் தன்னிலையின்மையும் ஒருசேரப் பெற்றவை” (Foucault,1998,94). உள்நோக்கம் இருக்கிற இடத்தில் தன்னிலை தவிர்க்கமுடியாதது. ஆனால் ஃபூக்கோ அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். ஃபூக்கோ இதனை விளக்க வெவ்வேறு பொருண்மையிலான இரு சொற்களைக் கையாள்கிறார். ஒன்று உத்தி (Tactic) மற்றொன்று சூழ்ச்சி (Strategy).

Continue Reading →

ஆய்வு: வடவாரண்யேசுவரர் திருவாலங்காடு கல்வெட்டு

வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில்.

இது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளை தேய்த்துக்கரைத்து அழித்தட்டுவிட்டனர்.  ரத்தினசபை வாயிலை தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த ரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.   (படம் 1)

Continue Reading →