கவிஞர் தம்பி தில்லை முகிலனைப்பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச்சேர்ந்த இவரது அகால மரணம் பற்றிய நண்பர் சிவா முருகுப்பிள்ளையின் முகநூற் பதிவின் பின்னரே இவரைப்பற்றி அறிந்து கொண்டேன். இவரது மறைவைப்பற்றிய பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகநூற் பதிவு இவரது கலை, உலக மற்றும் சமூக, அரசியற் செயற்பாடுகளை நினைவுகூர்ந்திருந்தது. இவரது முகநூலுக்குச் சென்று பார்த்தேன். கலாபூஷணம் விருதினைபெற்ற இவருடனான நேர்காணல்கள் வெளியான பத்திரிகைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அதன் பின்னர் இவரது அண்மையப் பதிவுகளைப் பார்த்தேன். மார்ச் 30 எழுதிய பதிவில் பின்வரும் கவிதையினைப் பதிவு செய்திருந்தார்:
“வாதம் நிதம் வளம் காண
தினம் மோதலாகத் தொடரட்டும்.
பேதமழிக்க யாவரும்
பொதுமை காண ,
மனிதர் இனிமை காண,
வாதம் நிதம் தொடரட்டும்.”
மானுட சமுதாயத்தில் பேதங்கள் நீங்க, பொதுமை காண (பொதுமைக்குப் பல கருத்துகளுள: இனிமை, பொதுவுடமை என) வாதம் நிதம் மோதலாகவாவது தொடரட்டும் என்று அறை கூவல் விடுக்கின்றார். இதனை எழுதியபோது மணி காலை 8.20.
இவ்விதம் மானுட சமுதாய முன்னேற்றத்துக்காக அறை கூவல் விடுத்த கவிஞர் தம்பி தில்லை முகிலன் , மார்ச் 31 இரவு 10.02 மணிக்கான இரு பதிவுகளில் பின்வருமாறு எழுதுகின்றார்:
பதிவு ஒன்று: “இருப்பதற்கு விருப்பமில்லை என் இருப்பை என்னவர் என்போரும் விரும்பவில்லை ஏன் இருப்பான் என்பதில் எழும் கேள்விக்குப் பதில் இறப்பதே சரி ஆகவே எனக்காக யாரும் கவலைப்படாதீர். ஒருவன் சொன்னதைச் சொன்னேன் சரியா பிழையா சொல்வீர். ஒருவர் இல்லை இன்று பத்தில் எட்டுப்பேர் சொல்வது தான். பற்றும் பாசமும் அற்றுப்போன காலமிது. செத்துப் போனால் என்ன? நடமாடும் பிணமாகத்தானே நாளும் பலர் இங்கு வாழ்கிறார்? பிறப்பைவிட இறப்பே இப்போ பெரிது. விடுதலை.”
பதிவு இரண்டு: “செல்கின்றேன் கவலைப் படாதீர்கள். போதுமானது வாழ்கை. பிறருக்கு வாழ்வதே பிறவிப்பயன் என்பார். என்னால் பிறருக்கு வாழமுடியாது உள்ளது. உயிர்தான் உள்ளது. அதனால் எவருக்கும் ஒன்றும் செய்ய முடியாது. என்னை என்நிலை அறிந்தவர் செத்துப்போ என்றும் சொல்வதும் உண்டு. அது பற்றின் காரணம். இப்போ பற்றும் பாசமும் இடையூறாய் இருப்பது உண்மைதானே. அதனால் இறப்பை நாமே தேடுவது சரியா? பிழையா? என்நிலையில் சரியே.”
இவ்விதமிட்ட கவிஞரின் முகநூற் பதிவானது அவரது முகநூல் நண்பர்கள் மத்தியில் திகைப்பினை ஏற்படுத்தியதை இப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர்களின் எதிர்வினைகளிலிருந்து தெரிய வருகின்றது.
நண்பர் பாலசிங்கம் சுகுமார்: “என்ன”
Jasothsrabanu Shekar என்பவரும் பதிவு புரியாமல் கேட்கின்றார்: “என்ன?’
நாகசோதி தங்கவேல் என்னும் நண்பருக்கு விடயம் புரிந்திருக்கின்றது. எனவே அவர் கவிஞருக்கு ஆறுதலும், ஆரோக்கியமான ஆலோசனையும் கூறுகின்றார்: “சொல்பவர்கள் சொல்லட்டும் எல்லோர் விருப்பத்திற்கும் வாழ விரும்பினால் எம்மால் வாழ முடியாது, நீங்கள் இன்னும்பல ஆண்டுகள் தமிழுடனும் கவியுடனும் ஆரோக்யமாக வாழவேண்டும் இறைவன் துணையிருப்பார்.”