என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் ‘ராஜு அங்கிள்’ என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி. அவருக்கும் அம்மாவுக்குமிடையில் பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது ‘நாஷ்’ காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.
இவர் சிவாஜியின் ‘புதிய பறவை’, ‘ஆலயமணி’ திரைப்படங்கள் வெளியான காலகட்டத்து இளைஞர்களிலொருவர் என்பதால் சிகரட் பிடிப்பதிலிருந்து, தோள்களைக் குலுக்கிச் சிரித்துக் கதைப்பதிலிருந்து அன்றிலிருந்து இன்று வரை அதே சிவாஜி ‘ஸ்டைலை’ப் பின்பற்றி வருபவர். 1970இலேயே கனடாவுக்கு வந்து விட்டார். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: அக்காலகட்டத்தில்தான் அம்மப்பாவின் மறைவும் நிகழ்ந்தது. அம்மப்பாவின் சகோதரர் ஒருவருக்கும் இவர் மீது மிகுந்த பிரியம் இருந்தது. அவர் சிறிது காலம் புளியங்குளத்தில் இருந்த தனது பண்ணையொன்றை இவரது பொறுப்பில் விட்டுப் பார்த்தார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லையென்றே கூறுவேன். எப்பொழுதும் நண்பர்களுடன் ‘ஜாலி’யாக நகரத்தில் திரிந்த இவருக்கு வன்னிக்காட்டுப் பகுதி ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வாரமும் அடிக்கடி அம்மாவிடம் , அப்பொழுது அம்மா வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார், ‘அக்கா, அக்கா’ என்று ஓடி வந்து விடுவார்.
அப்பொழுதுதான் நான் அப்பா வீட்டில் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் தமிழக வார, சஞ்சிகைகளில் என்னை மறந்து வாசிப்பதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தேன். ஒருமுறை அம்மாவிடம் வரும்போது அழகாக ‘பைண்டு’ செய்யப்பட்டிருந்த , கல்கியில் தொடராக வெளியான அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’ நாவலைக் கொண்டு வந்திருந்தார். அதன் மூலமே எனக்கு எழுத்தாளர் அகிலன் அறிமுகமானார்.