“அன்புள்ள முருகபூபதி, நலம், நாடுவதும் அதுவே!” இவ்வாறு தொடங்கும் நீண்ட கடிதத்தை, ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பிரபல நாவலாசிரியருமான இளங்கீரன் எங்கள் நீர்கொழும்பு ஊரிலிருந்து 19 செப்டெம்பர் 1989 திகதியிட்டு எழுதியிருந்தார். அதற்கு 24 – 10 – 1989 ஆம் திகதி நானும் பதில் அனுப்பியிருந்தேன். நான் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். வருவதற்கு முன்னர் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கொழும்பில் புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்திருந்த முஸ்லிம் லீக் வாலிபர் சம்மேளனத்தின் மண்டபத்தில் அவருக்கு மணிவிழா பாராட்டு நிகழ்ச்சியையும் ஒழுங்குசெய்துவிட்டுத்தான் விடைபெற்றேன். இலக்கிய உலகில் இளங்கீரனும் எனக்கு மற்றுமொரு ஞானத்தந்தை. அவருடைய இயற்பெயர் சுபைர். அவருக்கு முதலில் தெரிந்த தொழில் தையல்தான். அதன்பின்னர் முழுநேர எழுத்தாளரானார். பெரிய குடும்பத்தின் தலைவர். வாழ்க்கையில் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். துவண்டுவிடாமல் அயராமல் இயங்கினார். சிறுகதை, நாவல், தொடர்கதை, நாடகம், விமர்சனம், வானொலி உரைச்சித்திரம் , இதழியல் என அவர் கைவைத்த துறைகளில் பிரகாசித்தார். கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்த காலத்தில் இளங்கீரனின் தொடர்கதைகள் வெளியானது. அதில் ஒரு பாத்திரம் பத்மினி. அந்தப்பாத்திரம் கதையின் போக்கில் இறக்கநேரிடுகிறது. அதனை வாசித்த அக்கதையின் அபிமானவாசகர் ஒருவர், ” பத்மினி சாகக்கூடாது” என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். இவ்வாறு வாசகரிடம் தமது பாத்திரங்களுக்கு அனுதாபம் தேடித்தந்தவர் இளங்கீரன் என்ற தகவலை கைலாசபதி தாம் எழுதிய நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதி நூற்றாண்டு காலத்தில் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி நாடகமும் இருதடவைகள் மேடையேறியிருக்கிறது. அவர் எழுதிய பாலஸ்தீன் என்ற நாடகத்தை அன்றைய அரசு தடைசெய்தது. இலங்கை வானொலியில் அவர் எழுதி ஒலிபரப்பான சில நாடகங்கள் “தடயம்” என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. கொழும்பிலிருந்து மரகதம் இலக்கிய இதழையும் நடத்தியிருக்கும் இளங்கீரன், தோழர் சண்முகதாசனின் இலங்கை கம்யூனிஸ்ட் ( பீக்கிங் சார்பு) கட்சி வெளியிட்ட தொழிலாளி ஏட்டிலும், குமார் ரூபசிங்க நடத்திய ஜனவேகம் வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாநகர சபைத்தேர்தலிலும் ஒன்றிணைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். இருபத்தியைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் பன்னூலாசிரியர். 1927 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் இளங்கீரன் 1997 இல் மறைந்தார். ” இளங்கீரனின் இலக்கியப்பணி” என்னும் ஆய்வு நூலை ரஹீமா முஹம்மத் எழுதியிருக்கிறார்.
எனது இனிய இலக்கிய நண்பர் இளங்கீரன், 29 ஆண்டுகளுக்கு முன்னர் மரகதம் Letter Hade இல் 14 பக்கங்களில் எழுதியிருக்கும் இந்த நீண்ட கடிதம், அவரது வாழ்வையும் பணிகளையும் அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் சோதனைகளையும் பதிவுசெய்கின்றது. இவ்வாறு மனந்திறந்து எனக்கு எழுதியிருப்பதன் மூலம் அவர் என்னை எவ்வளவுதூரம் நேசித்திருக்கிறார் என்பதையும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் புரிந்துகொள்கின்றேன்.