– இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் கலை, இலக்கியச் சஞ்சிகையின் ஏப்ரில் 20018 இதழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அறுபதாண்டு இலக்கியப்பங்களிப்பினைச் சிறப்பிக்கும் மலராக வெளிவந்திருக்கின்றது. அதில் வெளியாகியுள்ள எனது கட்டுரையான ‘அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில’ என்னுமிக் கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. –
இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர்தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தடம் பதித்தவை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். இவரது எழுத்துலகக் கால கட்டத்தை புலம்பெயர்வதற்கு முன், புலம் பெயர்ந்ததற்கு பின் என இருவேறு காலகட்டங்களில் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். இவர் பரவலாக , உலகளாவியரீதியில், குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட காலகட்டம் இவரது புலம்பெயர் எழுத்துக் காலகட்டம். அதற்காக இவரது ஆரம்ப எழுத்துலகக்காலகட்டம் ஒன்றும் குறைவானதல்ல. தனது ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் வாயிலாகவும் இவர் கலை, இலக்கியத்திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்று, அக்காலகட்டத்துப் படைப்புகள் மூலம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்தவர்தான். அந்த வகையிலும் இவர் புறக்கணிக்கப்பட முடியாதவரே. இச்சிறுகட்டுரையில் இயலுமானவரையில் இவரது இலக்கியப்பங்களிப்பினைச் சுருக்கமாக நோக்குவதற்கு முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் என் பார்வையில் இவரது இலக்கியப்பங்களிப்பினை இவரது படைப்புகளை நான் அறிந்த வரையில், வாசித்த வரையில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இவரது படைப்புகளை இவர் நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முற்பட்ட காலகட்டத்தை வைத்து நோக்கினால் ஒன்றினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு சிறுகதை வடிவிலேயே அதிகமாகவிருந்திருக்கின்றது. இவரது புகழ்பெற்ற முதற் கதையான ‘அக்கா’ தினகரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்றிருக்கின்றது. 1964இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத்தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதுடன் அதன் பெயராகவும் விளங்குகின்றது. இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் ஊக்குசக்தியாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை ‘அக்கா’ நூலுக்கான முன்னுரையில் இவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்களும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுமே இவரது ஆரம்ப எழுத்துலகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அ.மு.அவர்கள் அம்முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார்.
இவர் எழுத்துலகில் புகுந்த காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கியச் சூழலில் பல் வகையான இலக்கியப்போக்குகள் நிலவி வந்தன. கலை மக்களுக்காக என்னும் கோட்பாட்டுடன் இயங்கிய முற்போக்கு இலக்கியச் சூழல், பாலியல் சார்ந்த எழுத்தை மையமாக வைத்து எஸ்.பொ. இயங்கிக்கொண்டிருந்த ‘நற்போக்குச் சூழல்’ (முற்போக்கு எழுத்தாளர்களின் கூடாரத்துடன் எழுந்த பிணக்குகள் காரணமாகத் தனித்தியங்கிய எழுத்தாளர்கள் தம்மை அழைக்கப் பாவித்த பதமாகவே இதனை நான் கருதுகின்றேன்), கலை, கலைக்காகவே என்னும் நோக்கில் இயங்கிய எழுத்துக்குக் கலை என்னும் ரீதியில் முக்கியத்துவம் கொடுத்த எழுத்துலகச் சூழல், இவற்றுக்கு இடைப்பட்ட , அனைத்தையும் உள்ளடக்கிய , பிரபஞ்ச யதார்த்தவாதம் என்னும் நோக்கில் இயங்கிய மு.தளையசிங்கம் அவர்களின் சிந்தனைகளை மையமாகக்கொண்ட எழுத்துலகச் சூழல் எனப்பல்வேறு சிந்தனைகளைக்கொண்டதாக விளங்கிய இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலுக்குள் அ.மு. அவர்கள் நுழைந்தபோது அவரது எழுத்தானது இவ்வகையான சூழல்கள் அனைத்திலிருந்தும் தனித்து, தனித்தன்மையுடன் விளங்கியதை அவதானிக்க முடிகின்றது.
இவரது எழுத்தினைப்பற்றி மேற்படி ‘அக்கா’ சிறுகதைத்தொகுப்பில் அணிந்துரை வழங்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இவரைப்பற்றிக் கூறுவதையும், அ.மு. அவர்கள் நூலுக்கான முன்னுரையில் தன்னைப்பற்றிக் கூறுவதையும் நோக்குவது பயன் மிக்கது. அவரது எழுத்து பற்றிய சிந்தனையில் தெளிவினை அடைய அவ்வகையான நோக்கு உதவும். முதலில் கைலாசப்தி அவர்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம்:
“தனக்கென ஒரு நடையையும் போக்கையும் வகுத்துக் கொண்டு எழுதி வந்தார் அவர். தொகுதியிலடங்கியுள்ள கதைகள் எனது கூற்றுக்குச் சான்று… ‘அக்கா’ என்னும் தலைப்புப் பெயரைப் பார்த்துவிட்டு வாசகர் எந்த விதமான அவசர முடிவுக்கும் வந்துவிடக் கூடாது, காதல், சகோதர பாசம், குடும்பச் சச்சரவு முதலிய வழக்கமான ‘பல்லவி இங்கு பாடப்படவில்லை. காதல் போயிற் சாதலென்றே, சமூகத்தின் கொடுமை என்னே என்றே, வஞ்சனை செய்யும் மனிதரைப் பாரீர் என்றும், கதாசிரியர் எம்மை நோக்கிக் கூறவில்லை. அதற்கு மாறாகச் சர்வசாதாரணமான மனித உணர்ச்சிகளும் மனித உறவுகளும் கிராமப்புறச் சூழலில் எவ்வாறு தோன்றி இயங்குகின்றன என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர். நேர்மை, எளிமை, நுட்பம், விளக்கம், ஆகிய பண்புகள் பசுமை குலையாத ஓருள்ளத்திலிருந்து வந்து எமக்குப் புத்துணர்ச்சியளிக்கின்றன. நமது உணர்வைத் தொட்டுத் தடவிச் செல்கின்றன…… திரு. முத்துலிங்கம் பல்கலைக் கழகத்திலே விஞ்ஞானம் படித்த பட்டதாரி. கணிதத்தையும், பெளதீகவியலையும் இரசாயனவியலையும் படித்த அளவிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துள்ளார் என்று கூறமுடியாது. அது காரணமாகத் தற்காலத் தமிழ் இலக்கியங்களைப் படித்துவிட்டு, அவற்றினால் கவரப்பட்டு, அவற்றின் வழிநின்று எதிரொலிக்கும் பண்பு அவரிடம் காணப்படவில்லை. இது மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும். இலக்கியங்களிலிருந்து இரவல் அனுபவமும், போலியுணர்ச்சியும் பெற்றுக் கொள்ளாத அவர், தனது சொந்த அனுபவ உணர்வையே அடிநிலையாகக் கொண்டு, எழுதி வருகின்றார், இலக்கிய அறிவும், நூற் படிப்பும் எழுத்தாளனுக்கு ஆகாதன என நான் கூறுவதாக எவரும் கருத வேண்டியதில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக் குதவாது என்னும் பழமொழியையே நான் இலக்கிய சிருட்டித் துறைக்கு ஏற்றிச் சொல்கின்றேன்; அவ்வளவுதான். தனது அனுபவத்தையே ஆதாரமாகக் கொண்டு திரு. முத்துலிங்கம் எழுதிவருவதினுல் அவர் எழுத்துக்களில் பலமும் பலவீனமும் விரவிக் காணப்படுகின்றன. எனினும் தராசில் பலம் தாழ்ந்தே காணப்படுகின்றதென்பதில் ஐயமில்லை. சிறு கதை, நாவல் ஆகியவற்றில் அடிக்கடி காணப்படும் நைந்து போன சொற்றொடர்களோ, கதை நிகழ்ச்சிகளோ, பாத்திரங்களோ இக்கதைகளில் காணப்படா; அதே சமயத்தில் பிரச்சினைகளும் காணப்படா. ஆனால், ஆசிரியர் திறம்படச் சித்திரிக்கும் யாழ்ப்பாணத்துக் கிராமப்புறச் சூழ்நிலையிலே தோன்றும் சில பாத்திரங்களின் மன நோவுகளையும், குமைவுகளையும், சலனங்களையும், கொந்தளிப்பையும், நாம் இலகுவில் உணர்ந்து கொள்கிறோம்….. ஆசிரியரின் சிறப்பியல்பு. இவ்வெற்றிக்குத் துணை செய்யும் அமிசங்கள் சிலவற்றையும் குறிப்பிடல் வேண்டும். யாழ்ப்பாணத்திலே கொக்குவில்கோண்டாவில் – இணுவில் – பகுதியே ஆசிரியரது பெரும் பாலான கதைகளின் களம். அப்பகுதியிலுள்ள வீடுகள், தெருக்கள், ஒழுங்கைகள், கோயில் ஆகியன உயிர்த்துடிப் புடன் கதைகளில் இடம் பெறுகின்றன; மக்களின் ஊண், உடை, பழக்கவழக்கங்கள், கம்பிக்கை முதலியன பாத்திரங்களின் சூழலுக்கு வரம்பு செய்கின்றன; அவ்வரம்பிற்குள்ளேயே மனித உணர்ச்சிகள் தோன்றி மறைகின்றன; அவ்வுணர்ச்சிகள் தாம் பிறந்த சொல் வடிவிலேயே எமக்குப் பொருள் விளக்கஞ் செய்கின்றன; நுணுக்கமான ஒலியலைகளைப் பதியும் நுண் கருவிபோலத் தனக்கு நன்கு தெரிந்த உணர்ச்சிமயமான அநுபவத்தைத் திரிக்காமலும், விகாரப்படுத்தாமலும், கெடுக்காமலும் அமைதியான முறையில் சொற்களிலே தேக்கியுள்ளார் திரு. முத்துவிங்கம்.”
Continue Reading →