முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி: கிடைத்தது பார்த்திபனின் சிறுகதைத்தொகுப்பு ‘கதை’! புகலிட, புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகளில் மிகுந்த சிறப்பானதோரிடத்திலிருப்பவர் எழுத்தாளர் பார்த்திபன், சிறுகதை, நாவல் என வெளியான அவரது படைப்புகள் மிகவும் முக்கியமானவை. அவரது படைப்புகளில் பிறந்த மண்ணில் நிலவிய சூழல்கள், புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் நிலவிய, நிலவிடும் சூழல்கள், நவீன உலகமயப்படுத்தப்பட்ட மானுட சமுதாயச் சூழலில் மானுடர் நிலை எனப்பல்வகைச் சூழல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். முக்கியமான படைப்பாளி. அவரது சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ‘கதை’ என்னும் பெயரில் தொகுப்பொன்றினை அவரது நண்பர்கள் ‘தமிழச்சு’ (சுவிஸ்) பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள். இதற்காக அந்நண்பர்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
பார்த்திபனின் சிறுகதைத் தொகுதியான ‘கதை’யின் முதல் ஐந்து சிறுகதைகளை வாசித்து விட்டேன். அவை பற்றிய கருத்துகளிவை. இவற்றைத்தாம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ‘புள் ஷிட்’ குப்பைகள் என்று தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் சுமதி ரூபன் முதல் மூன்று கதைகளுக்கு மேல் தன்னால் வாசிக்க முடியவில்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். அவ்வப்போது வாசித்து முடிந்ததும் அவை பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கும் தீர்மானித்திருக்கின்றேன்.
தொகுப்பிலுள்ள முதல் ஐந்து கதைகளின் தலைப்புகள் வருமாறு: ‘ஒரே ஒரு ஊரிலே..’, (1986), ‘பாதியில் முடிந்த கதை’ (1987), ‘காதல்’ (1988), ‘பசி’ (1988) & ‘மனைவி இறக்குமதி’ (1988).
மானுட வாழ்வானது அதன் முடிவு தெரியாத நிலையில் இறுஹி வரையில் ஆசாபாசங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. முகநூலில் முடிவு வரைப் பல்வேறு விடயங்களைப்பற்றிப் பதிவுகளிட்ட பலரின் முடிவுகளை அடுத்த நாள் அறிந்திருக்கின்றோம். கனவுகளுடன், கற்பனைகளுடன், வருங்காலத்திட்டங்களுடன் , பல்வகையான உணர்வுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் மானுட இருப்பானது பல சமயங்களில் எதிர்பாராத விபத்துகளில், இயற்கை, செயற்கை நிகழ்வுகளின் கோரப்பிடிக்குள் சிக்கி, வாழும் மண்ணில் நிலவும் சமூக, அரசியற் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் காரணமாக முற்றுப்பெறுவதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் மூலமறிந்திருக்கின்றோம். பார்த்திபனின் ‘கதை’ தொகுதியிலுள்ள கதைகளான ‘ஒரே ஒரு ஊரிலே’, ‘பாதியில் முடிந்த கதை’ மற்றும் ‘பசி’ இதனை மையமாக வைத்துப் புனையப்பட்டிருக்கின்றன.