தமிழரின் காலக் கணிப்பில் ஒருவரின் அறுபதாண்டு வாழ்க்கை ஒரு ஆண்டுவட்டச் சுற்றைப் பூர்த்திசெய்கின்றது என்பர். அவ்வகையில் எமது தமிழ் இலக்கியவாதியான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணமும் ஒரு ஆண்டுவட்டப் பயணத்தைக் கடந்து தொடர்கின்றது. அறுபதாண்டுகளாகத் தளராமல், வரட்சி காணாமல் கையிருப்பில் இன்னமும் ஏராளமான ‘விஷயங்களை” வைத்துக்கொண்டு இலக்கியப் பயணமொன்றைப் புகலிடத்திலும் தொடர்வதென்பது எழுத்தாளனுக்கு இலகுவில் கிடைக்கும் பாக்கியமொன்றல்ல.
தற்போது புகலிடத்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் எனது அயல் கிராமத்தவர். நான் ஆனைக்கோட்டையில் வாழ்ந்த எழுபதுகளில்; அவர் எழுத்துத் துறையில் அனைவரையும் பிரமிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவரது முதலாவது சிறுகதைத்தொகுதி ‘அக்கா” வெளிவந்த 1964இல் எனக்கு 10 வயது. நான் தென்னிலங்கையில் பிறந்து நீர்கொழும்பில் இளம்பிராயத்தைக் கடந்தவன். அங்கும் ஒரு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுத்தாளராக இருந்தார். நான் நூலியல்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிராத அக்காலத்தில் சில சமயங்களில் அறியாமையால் இருவரையும் பெயர் மாற்றிக் குழப்பிக்கொண்டதுண்டு.
நான் புலம்பெயர்ந்தபின்னர் ‘நூல்தேட்டம்” ஆவணத்தொகுப்பின் வேலைத்திட்டத்தில் ஓய்வுவேளைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் தொடர்பினை வலிந்து தேடிக்கொண்டேன். அப்பொழுது அவர் கனடாவில் இருந்தார். சிரமம் பாராது தனது நூல்களை எனக்கு தபால் பொதிகளில் அவ்வப்போது அனுப்பியும் வைத்திருந்தார். அவரால் அனுப்பப்படும் நூல்களை அவ்வப்போது நான் ஐ.பீ.சீ. வானொலியின் காலைக்கலசம் இலக்கியத் தகவல் திரட்டு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வந்துள்ளேன்.
2004இல் ஒருதடவை இலங்கை சென்றவேளையில் அமரர் பூபாலசிங்கம் அவர்களின் மகன் ராஜனை 14 ஆண்டுகளின் பின்னர் அவரது வெள்ளவத்தை புத்தகக் கடையில் சந்திக்கநேர்ந்தது. அவ்வேளையில் ராஜன் எனக்குத் தந்த நினைவுப்பரிசு ‘அ.முத்துலிங்கம் கதைகள்” என்ற பெருந்தொகுப்பாகும். அந்நாட்களில் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் பெருந்தொகுப்புகள் பரவலாக வெளிவந்திருக்கவில்லை. அதனால் 2003 டிசம்பரில் தமிழினி வெளியிட்டிருந்த அப்பெருந்தொகுப்பு என்னைத் திகைக்க வைத்திருந்தது. எழுத்தாளர் அ.மு.வின் 2003 வரை வெளியான தேர்ந்த 75 சிறுகதைகளை 774 பக்கங்களில் உள்ளடக்கியதாக அந்நூல் இருந்தது.
பத்தாண்டுகளின் பின்னர் 2014இல் நூல் தேடலுக்காகத் தமிழகம் சென்றிருந்த வேளையில் ஈழநாடு பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவாவின் அழைப்பையேற்று திருச்சிக்குச் சென்றிருந்தேன். நான் எதிர்பாராத வகையில் அன்று திருச்சிராப்பள்ளி ஆண்டவர் அறிவியல் கல்லூரியில், ஈழத்து இலக்கியத்தை தமது பட்டப்படிப்பிற்காகப் பயிலும் மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தார். பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். ‘புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு” என்ற பொருள்பற்றிப் பேசுமாறு என்னை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனது அறிமுக உரையை நிகழ்த்தினேன்.