அண்மையில் ஆங்கிலத்தில் கத்யான அமரசிங்க ( Kathyana Amarasinghe) ஆங்கிலத்தில் எழுதிய கவிதை Let My Tears Fall என்னும் கவிதை இது. 83 கறுப்பு ஜுலைக்கலவரத்தால் நாட்டை விட்டே அகதியாகப் புலம்பெயர்ந்து சென்ற தனது தமிழ்ச்சகோதரனை எண்ணி, இதயம் வருந்தி வெளிப்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடு இக்கவிதை. அண்மையில் இவரது ‘பருத்தித்துறைக் கடற்கரையில்..’ என்னும் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினை வழங்கியிருந்தேன். இப்பொழுது கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினைத் தருகின்றேன். பல்லினங்கள் வாழுமொரு சூழலில் இது போன்ற கவிதைகள் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வினை வளர்க்க உதவும். தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். – பதிவுகள் –
கவிதை: என்னைக் கண்ணீர் உகுக்க விடு!
மூலம் (ஆங்கிலம்) – கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் – வ.ந.கிரிதரன் –
கறுப்பு ஜூலை வானமானது
செவ்விரத்தத்தால் வர்ணமடிக்கப்பட்டிருந்தபோது,
நகரம் வெறுப்பினால் எரிந்துகொண்டிருந்தபோது,
என்னுடைய சகோதரனின் இதயம் காயப்பட்டிருந்தபோது,
அது துண்டுகளாகச் சிதறுண்டிருந்தபோது
நான் எங்கே?
பனையோலை வேலியானது உடைக்கப்பட்டபோது
பூத்துக்குலுங்கும் பூக்கள் சிதைக்கப்பட்டபோது
எனது சகோதரன் தனக்குப் பிரியமான நாட்டை விட்டுப்
பலவந்தமாக ஓடச்செய்யப்பட்டபோது
அத்துடன் தொலைதூர நாடொன்றில்,
நாடற்றவனாகத் தனிமை கவிந்த மனிதனாக
அவன் அமைதியாகக் கண்ணீர் சிந்தியபோது
நான் எங்கே!