அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’ என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.
அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: “சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல”. இன்னுமோரிடத்தில் ” தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது” என்கின்றார்.
கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் “இசைத்தமிழ்ச் சிந்தனைகள்” நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள ‘கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்’ என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன ‘கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்” என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் “கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு – குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு – ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்.” (பக்கம் 61) என்றும் கூறுவார்
Continue Reading →