முன்னுரை: –
இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி. நமது வாழ்க்கையே இலக்கியம். அவ்வகையில் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர். தமிழ்மொழியானது இன்றும் நிலைத்து நீடித்திருப்பதற்குக் காரணம், அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டே வருவதால் வழக்கிலும், வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து செம்மொழியாக மிளிர்ந்து நன்னடைபோட்டு வருகிறது.
தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிக ஏற்றமுண்டு. இரண்டாம் நுற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வகையில் சிலம்பில் காணப்படும் வாழ்க்கை நெறிகளில் முக்கியமான அம்சங்களை இக்கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.
சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் : –
” நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்று டாக்டர் சாமிநாதய்யர் கூறியதுபோல் சிலப்பதிகாரமானது தமிழினத்தில் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. தமிழர்களின் பண்பாடுகளை மிகத் தெளிவாகக் காட்டும் நுல் சிலப்பதிகாரமாகும். இதற்குப் பிறகு நமது பண்பாட்டினை படம்பிடித்துக் காட்டும் பெருங்காப்பியம் இதுவரை தோன்றவில்லை எனலாம். சிலப் பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், துறவி கவுந்தியடிகள் போன்றோர் வாயிலாக பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை நயம்பட உரைக்கிறார் இளங்கோவடிகள்.
1. பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்.
2. அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
3. ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்.
4. கவுந்தியடிகள் வடக்கிருந்தது.
5. மானுடவியல் நோக்கில் ஐவகைநில தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, நாட்டாரியல் கலை மற்றும் இசை, நடனம்.
பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர் : –
கண்ணகியின் கற்புத் திறத்தை கற்புடை மகளிர் என இரண்டு சொற்களில் கூறாமல்
”பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறுஉம்
பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டு கொல் ” ( ஊர்சூழ் வரி 51 – 53 )
அதாவது கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப் பெண்டிர். கணவன் துன்பங்களுள் பெண்களுக்கு மிகக் கொடியதாய் இருப்பது அவனது போற்றா ஒழுக்கமான பரத்தமையே. என்றாலும் கோவலனின் செய்கைகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆறியக் கற்பு (அ) அறக் கற்பு மற்றும் சீறிய கற்பு (அ) மறக் கற்பு என கண்ணகி உயர்ந்து இருந்தாள்.