– பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடன் அண்மையில் ‘பதிவுகள்’ இணைய இதழானது மின்னஞ்சல் வாயிலாக நேர்காணலொன்றினை நடாத்தியது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரத் ஆன்ந்த அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு எமது முதற்கண் நன்றி. இந்நேர்காணலில் அவர் தன்னைப்பற்றி, தான் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, மொழிபெயர்க்க எண்ணியுள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, இவ்வகையான மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும் ஏன் அவசியமானவை என்பது பற்றி, சமகாலச் சிங்கள கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, தான் ஏன் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தார் என்பது பற்றி, தற்போதுள்ள நாட்டின் அரசியற் சூழல் பற்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி.. இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.
இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான ‘உடைந்த காலும், உடைந்த மனிதனும்’, மற்றும் ‘நடு வழ்யில் ஒரு பயணம்’ ஆகியன லக்பிமா’ சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
2003 இருந்து இதுவரை இவர் 11 சிறுகதைத் தொகுப்புகளும், 3 நாவல்களும், ஒரு சிறுவர் கதைத் தொகுப்பும், ஒரு கவிதை நூலும் மற்றும் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் ‘புத்தம் சரணம்’ என்ற பௌத்த ஆய்வு நூலையும் சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிங்கள் மொழியில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 200 சிறுகதைகள் வரையில் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. இவ்விதமான நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகளின் தேவை தற்காலச்சூழலில் மிகவும் அவசியமென்று ‘பதிவுகள்’ கருதுகின்றது. அதனால் இந்நேர்காணலை வெளியிடுவதில் பெருமையுமடைகின்றது.
1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?
நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.
சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) ‘காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்’ (Department of Land Title Settlement) ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer) வேலை பார்த்து வருகின்றேன்.
பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.
2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?
Continue Reading →