” உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலை மரபை வளர்த்துவந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத்துணை பின்தங்கியிருப்பது ஏமாற்றமும் வேதனையுமளிப்பதாகும். “
இவ்வாறு 48 ஆண்டுகளுக்கு முன்னர், ஈழத்து இலக்கியஉலகில் முன்னர் வெளியான மல்லிகை இதழில் (1970 செப்டெம்பர்) சொன்னவரும், இலங்கையின் சிங்களத்திரையுலகை வெளியுலகம் வியப்புடன் விழியுயர்த்தி பார்க்கவைத்தவருமான திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று முன்தினம் கொழும்பில் காலமானார்.
இவ்வாறு தென்னிந்தியப்படங்கள் பற்றிய பார்வையை அன்றே வைத்திருந்த இவர், ஜெயகாந்தனின் முதல் திரைப்படமான “உன்னைப்போல் ஒருவனை” யும் பார்த்திருக்கிறார். அதனை இவருக்காகவே ஜெயகாந்தன் காண்பித்துமிருக்கிறார் என்ற தகவலையும் அதே மல்லிகையில் பதிவுசெய்துள்ளார். டொமினிக் ஜீவாவின் மல்லிகை எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்களை ஒவ்வொரு இதழிலும் மரியாதை நிமித்தம் அட்டைப்பட அதிதியாக கௌரவித்து அவர்களின் நேர்காணல்களை அல்லது அவர்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வந்திருக்கிறது. மாவை நித்தியானந்தன், ‘தில்லைக்கூத்தன்’ என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மல்லிகைக்காக லெஸ்டரை நேரில் சந்தித்து எழுதிய குறிப்பிட்ட நேர்காணல் கட்டுரையைப்பார்த்த பின்னரே லெஸ்டரின் படங்களை விரும்பிப்பார்த்தேன்.
முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர். அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய) முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர். லெஸ்டர் பற்றிய சிறந்த அறிமுகத்தை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதிவந்துள்ளனர்.
1919 ஆம் ஆண்டில் ஏப்ரில் மாதம் பிறந்திருக்கும் லெஸ்டர், கடந்த ஏப்ரில் மாதம் தனது 99 ஆவது பிறந்ததினத்தையும் கொண்டாடினார். அதனை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவர் வசித்த திம்பிரிகஸ்ஸாய இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார்கள். நூறு ஆண்டு வயதை நெருங்குவதற்கு 12 மாதங்கள் இருக்கும் தருணத்தில் அவர் இலங்கை கலையுலகிற்கு விடைகொடுத்துவிட்டார்.