முன்னுரை
இயற்கையின் மக்களான மானிடர்களின் வாழ்க்கையானது பிறப்பு முதல் இறப்புவரை ஏதோ ஒருவிதத்தில் ஒன்றிக்காணப்படுகிறது. இன்பமும் துன்பமும் இணைந்தது மனிதவாழ்வு என்றாலும், மக்கள் வாழ்கிற சூழலுக்கும் கிடைக்கப் பெறுகிற வசதிகளுக்கும் ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை மாற்றமுள்ளதாகக் காணப்படுகிறது. உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் கூட அவரவர் வாழும் நிலைக்கேற்ப வேறுபட்டு விளங்குகின்றன. மனிதனின் அறிவு நிலைக்கேற்ப அவன் பேசும் சைகையிலிருந்து திருந்திய நிலை வரை மாற்றமுள்ளதாகக் காணப்படுவதைப் போன்று மக்களின் வாழ்க்கை நிலையும் மாற்றமுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் பழங்குடி மக்களான முதுவர் வாழ்வியல் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.
முதுவர் அறிமுகம்
கேரள மலைகளிலே வாழும் ஏனைய மலையின மக்களோடு ஒப்பிடுகையில் முதுவர் பழங்குடி மக்களே ஆதிமுதற்கொண்டு வாழ்ந்து வருவதாகக் கருதுகின்றனர். இப்பழங்குடியினர் கேரளத்தில் இடுக்கிமாவட்டத்தில் 87 இடங்களிலும், தமிழ்நாட்டில் ஆனைமலை, மதுரை, போடிநாயக்கனூரைச் சேர்ந்த மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துவருகின்றனர். “கேரளாவில் வசிக்கக்கூடிய முதுவர்கள் – மலையாள முதுவன் என்றும், தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய முதுவன் பாண்டிய முதுவன் என்றும் அழைக்கப்படுகின்றனர்” என்று ஜோஸ்வா தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்பழங்குடியின மக்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
முதுவர் இனம்
முதுவர் இனம் என்பது நெருங்கிய உறவினரிடையே மணம் செய்து கொள்ள மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும் ஓர் இயல்பாகும் என்ற மானிடவியலறிஞரின் கருத்திற்கேற்ப முதுவர் பழங்குடியினர் பிற பழங்குடியினரிடமிருந்து வேறுபட்ட பண்புநலன்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். தேனீக்கள் மனித இனங்கள் என்னும் நூலில், ஆனைமலையில் வாழும் மலைமக்களும் திருவிதாங்கூர் – கொச்சிக்காடுகளில் வாழ்ந்துவரும் நாகரிகமடையாத மக்களும் திராவிட இனத்தைச் சார்ந்தவராவர் என்று எல்.ஏ.கிருஷ்ணஐயர் குறிப்பிடுகின்றார். இப்பழங்குடியினர் நீக்கிரிட்டோஸ் (Negritos) இனத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. முதுவர் கலப்பினத்தவர் என்று மாக்கே குறிப்பிடுகின்றார். தர்ஸ்டனும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இப்பழங்குடியினர் உயர் சாதியினராகக் கருதப்படும் பிரமாணர், நாயர், தேவர், அகமுடையார், வெள்ளாளர் போன்ற இன மக்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். தங்கள் இனப் பெண்கள் மேற்குறிப்பிட்ட இனத்தாருடன் மண உறவு கொண்டாலும் திரும்பவும் தங்கள் இனத்தாருடன் சிறிது காலம் கழித்து சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்கின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் புலையர், மலைப்புலையன், காடர், வேடர் மன்னான் போன்ற இனமக்களைத் தங்கள் வீட்டில் அனுமதிப்பதோ, அவர்களிடமிருந்து பொருட்களை உண்பதோ இல்லை என்கின்றனர்.