இலக்கியம் என்பது கற்பனையால் விளையும் பாடுபொருளை உடையது. இலக்கியம் எனும் சொல் தொகை நூல்களுள் எங்கும் காணப்படவில்லை என்றாலும் பாடல், கவிதை, பாட்டு, செய்யுள்,நூல், பனுவல், ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் இருந்து பெறப்படும் பிற பொருள்களாவன போர், வீரம், கொடை, சமுதாய நடை பற்றிய சான்றோர்களின் அறவுரை, அறிவுரை என்பன. இத்தகைய சிறப்புப் பெற்ற நம் இலக்கியத்தில் இலக்கியக் கோட்பாடுகளும் இயைந்துள்ளன. இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானவை இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள் பலவாகும். இவையே முன்னம்,மரபு, உவமை, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, மெய்பாடு, வண்ணம், வனப்பு, யாப்பு, என்ற இப்பத்துக் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றைத் தனித்தனி இயல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு மெய்பாட்டில் காணலாகும் உவகையினை பதிற்றுப்பத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
மெய்பாடு
மானுடக்குலத்திற்கு உரியது மெய்பாடு. அது உலக முழுமைக்கும் பொதுவானது மனித உணர்வைக் கண்ணால் காணுமாறும், செவியால் கேட்குமாறும், மெய்பட மெய்யியல் படக்காட்டுவது மெய்பாடு. எண்வகை மெய்பாடுகளும் இயல்பில் தோன்றும் இடம் அகம். அகத்தில் ஏற்படும் உணர்வினை மெய்காட்டுகின்றது. இவ்வாறு மெய்பாடுகள் அகவாழ்விற்குப் பொருந்தும் மெய்பாடுகளாகவும் என்றும் புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் காட்டப்படுகின்றன.
மெய்பாட்டினை தொல்காப்பியர் தனியாக ஒரு இயலில் வகுத்துள்ளார்.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்பாடென்ப”( தொல்:பொருள்:24)
என்று எண்வகை மெய்பாடுகளை உரைக்கிறார். இதில்
நகை – எள்ளல், இளமை, பேதைமை, மடம்
அழுகை – இழிவு, இழவு, அசைவு, வறுமை
இளிவரல்- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை,
மருட்கை- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
அச்சம் – அணங்கு, தெய்வம், விலங்கு, கள்வர்,
பெருமிதம் -கல்வி, தறுகண்மை, புகழ், கொடை
உவகை – செல்வம்,புலன், புணர்வு, இன்பவிளையாட்டு
அகப்பொருட் பாடல்களில் உவகை, அழுகை, இளிவரல், மருட்கை, நகை, என்ற சுவைகளும் புறப்பாடல்களில் நகை, அழுகை, இளிவரல், வெகுளி, மருட்கை பெருமிதம் என்ற சுவைகளும் உணர்த்தப்படுகின்றன.