தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம் என பல முகங்களைக் கொண்டது ஆகும். இவற்றுள் இக்கால இலக்கியமும் ஒன்று. கவிதை, சிறுகதை, நாவல் முதலானவை இவ்வகையைச் சாரும். கவிதை படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் வைரமுத்து. இவரது படைப்புகளில் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்னும் நூலில் அமைந்த சமுதாயச் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது
கவிதை
கவிதை என்பது ஒரு கலையாகும். கவிஞர் தான் பெறும் அனுபவங்களைக் கற்பனை நயத்துடனும், கருத்துச் செறிவுடனும் ஒலிநயம், உணர்ச்சி, இனிமை, எளிமை ஆகியவற்றைக் கலந்து கவிதை வடிவங்களாகத் தருகின்றார். கவிதை குறித்து கவிமணி,
உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை (மலரும் மாலையும், ப.51)
என்று கூறுகின்றார். கவிஞரின் கருத்திற்கேற்ப கவிதையின் பாடுபொருள் அமையும்.
கவிதையின் வகைகள்
கவிதை இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யாப்பிலக்கணத்தோடு வரையறைக்கு உட்பட்டு அமைவது மரபுக்கவிதை என்றும், இலக்கணமின்றி வரையறையற்று அமைவது புதுக்கவிதை என்றும் வழங்கப்படுகின்றது. புதுக்கவிதைக்கு இலக்கணம் கூறுகையில் பாரதியார்,
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொல் புதிது சோதிமிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை (பாரதியார் கவிதைகள், பக்.318-319)
என்று கூறுகின்றார். பாரதியைத் தொடர்ந்து பல கவிஞர்கள் புதுக்கவிதை இலக்கியத்திற்கு வலுசேர்த்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வைரமுத்து ஆவார்.
கவிஞர் வைரமுத்து
புதுக்கவிதை இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். தற்காலக் கவிஞர் பெருமக்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர். வானம்பாடி இயக்கத்தைச் சார்ந்தவர். இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் படைப்புகளைப் படைத்துள்ளார்.
சமுதாய முன்னேற்றத்தில் இலக்கிய படைப்பாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இலக்கியம் அன்றி மக்களின் வாழ்க்கையையும் கவிஞர் வைரமுத்து தம் கவிதைகள் உலகிற்குப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.