நேற்று மாலை (18.05.2015) எழுத்தாளர் தேவகாந்தனுடன் ‘ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த , தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் ‘ஞானம்’ இதழாசிரியர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் தம்பதியினருடனான இலக்கியச்சந்திப்புக்குச் சென்றிருந்தேன். நிகழ்வில் கனடாவில் கலை, இலக்கியத்துறையில் நன்கு அறியப்பட்ட பலரைக் காணக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், மனுவல் ஜேசுதாஸ், அகணி சுரேஷ், அகில், தேவகாந்தன், பார்வது கந்தசாமி, சி.பத்மநாதன், ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, ‘சோக்கலோ’ சண்முகநாதன், முருகேசு பாக்கியநாதன், ‘காலம்’ செல்வம், த.சிவபாலு, முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர்.. எனப்பலரைக் காணக்கூடியதாகவிருந்தது.
நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்குமான மெளன அஞ்சலியுடன் ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினை நிகழ்த்தினார். அதிலவர் இலங்கையில் வெளியான தமிழ்ச்சஞ்சிகைகளின் பங்களிப்பு பற்றி, குறிப்பாக முதலாவது சஞ்சிகையான கே.கணேசின் ‘பாரதி’ தொடக்கம் ‘ஞானம்’ சஞ்சிகை வரையிலான இலக்கியப்பங்களிப்புகள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்தார். தனது முதலாவது சிறுகதை ஞானம் சஞ்சிகையிலேயே வெளியானதெனவும், மேலும் சிறுகதைகள் வெளியானதாகவும், தனது நாவலொன்று ஞானம் வெளியீடாக வெளியானதாகவும் தனது உரையிலவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
அதனைத்தொடர்ந்து ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான எழுத்தாளர் தி. ஞானசேகரன் ‘ஈழத்தின் இன்றைய இலக்கியச் செல்நெறி’ என்னும் தலைப்பில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார். தான் கூறவேண்டியவற்றை, மிகவும் திறமையாகத் தயார் படுத்தி வந்திருந்தார் என்பதை அவரது தான் கூற வேண்டிய பொருள் பற்றிய தெளிவான உரை புலப்படுத்தியது. அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான கருத்துகள் சில வருமாறு:
1. அண்மையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக உருவான இரட்டைக் குழந்தைகளாக நாட்டில் படைக்கப்பட்ட போர்க்கால இலக்கியத்தையும், நாட்டில் நிலவிய அரசியல் நிலை காரணமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்தபுலம்பெயர் இலக்கியத்தையும் குறிப்பிடலாம்.
2. அக்காலகட்டத்தில் உருவான இலக்கியம் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஞானம் சஞ்சிகை போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.
venkat_swaminathan_new_a
Copyright © 2024 இரவி — Primer WordPress theme by GoDaddy