தமிழகத்திலிருந்து நூல்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நான் நண்பரொருவரை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். அவர் என் பால்ய காலத்து நண்பர்களிலொருவர். நண்பர் வவுனியா விக்கியே எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் (Srirham Vignesh). அவர்களையே நான் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் வாங்க விரும்பும் புதிய நூல்களென்றாலும் சரி, உங்களது இளமைக்காலத்தில் நீங்கள் வாசித்த ‘பைண்டு’ செய்த படைப்புகள் அல்லது அக்காலகட்டத்தில் வெளியான நூல்கள் எவையென்றாலும் அவர் தன்னால் முடிந்த வரையில் தேடி, நியாயமான கட்டணத்தில் அனுப்புவார்.
நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நூல்களிலொன்று: ஆரம்பகால ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான எழுத்தாளர் ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’. என் பால்ய காலத்தில் நான் வாசித்த என்னைக் கவர்ந்த நூல்களிலொன்றென்பதால் , ஒரு நினைவுக்காக அந்நூலை வாங்க விரும்பினேன். அவரிடம் கூறினேன் இந்நூலை எங்காவது பழைய புத்தக் கடையில் கண்டால் வாங்க விருப்பமென்று. அவர் உடனேயே பழைய புத்தகக் கடைகளெல்லாம் தேடி , கடையொன்றில் அந்நூலைக் கண்டு பிடித்தார். ஆனால் அட்டையில்லாமலிருந்த நூலினையே அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் முகநூலில் பகிர்ந்திருந்த ஆரம்ப கால ராணிமுத்துப் பிரசுரங்களின் அட்டைப்படங்களிலொன்றாக ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’யுமிருந்தது. அதனை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அவர் அவ்வட்டைப் படத்தைக்கொண்டு அழகான அட்டையொன்றினை உருவாக்கி, அட்டையற்ற நந்திவர்மன் காதலிக்கு அதனை அணிவித்துக் கூரியரில் அனுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு நன்றி.
கூடவே அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளியான ஜே.எம்.சாலியின் ‘கனாக் கண்டேன் தோழி’ யின் பைண்டு செய்யப்பட்ட தொகுப்பினையும் கண்டெடுத்து அனுப்பினார். அத்தொடர் நாவலில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த சில ஓவியங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் விதவையின் மறுமணத்தைப்பற்றியும் பேசுகின்றது. நாவலில் அவ்வப்போது வரும் காவிரி ஆற்றங்கரைக் காட்சிகளும், மொழி நடையும் படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வன.