‘ஈழகேசரி’ (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் 7.11.1943 பதிப்பில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘கனல்’ என்னும் கவிதையானது ‘கவீந்திரன்’ என்னும் புனைபெயரில் வெளியாகியுள்ளது. 1924இல் பிறந்த அ.ந.க.வுக்கு அப்பொழுது வயது 19. தனது பதின்ம வயதினிலேயே அவர் கவீந்திரன் என்னும் புனைபெயரைப் பாவித்துள்ளதை அறிய முடிகின்றது. ஈழகேசரி பத்திரிகைப் பிரதிகளை ‘நூலகம்’ அறக்கட்டளை நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.
பின்னாளில் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் பரிணமித்த அ.ந.க.வின் பதின்ம வயதுக்கவிதையான ‘கனல்’ என்னும் இக்கவிதையிலேயே அதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண முடிகின்றது.
சண்டமாருதம் எழுந்ததாம். சகமெல்லாம் சூறையில் சுழன்றதாம். அச்சண்டமாருதத்தால் அண்டங்கள் யாவும் நடுங்கியதாம். மேலே ஆகாய மேகமும் அதனால் அலையும் நிலை ஏற்பட்டதாம். தொடர்ந்து எங்கும் கனல் தோன்றி மூடியதாம். எட்டுத் திசையும் எரியும் வகையிலான கனலது. யாவற்றையும் பொசுங்கிடச் செய்யும் பெரு நெருப்பு அது.