ஈழகேசரி 16.4.1944 ஞாயிற்றுக்கிழமைப் பிரதியை அண்மையில் நூலகம் இணையத்தளத்தில் வாசித்தபொழுது அவதானித்த , என் கவனத்தைக் கவர்ந்த விடயங்கள் வருமாறு:
1. முதற்பக்கத்தில் ‘புதிய கல்வித்திட்டம்’ பற்றிய ‘விந்தியா விசாரணைச்சபையின் கல்வித்திட்டம் பற்றிய பரிந்துரை சம்பந்தமாகப் பிரபல வழக்கறிஞர் பாலசுந்தரத்தின் அபிப்பிராயம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வருடாந்தப்பரிசளிப்பு நிகழ்வில் (7.4.44) அவர் ஆற்றிய உரையில் அவர் அந்நிய பாஷையில் ஊட்டப்படும் கல்வியினைச் சாடியிருக்கின்றார். அந்நிய பாஷையில் கல்வி கற்பதால் துரிதமாக அறிவு பெறவே முடியாது என்று அவர் கூறுகின்றார்.
‘விந்தியா’ விசாரணைச்சபை தாய்மொழி மூலம் கல்வியூட்ட வேண்டுமென்று வற்புறுத்தியிருப்பதுடன், பல்கலைக்கழகம் வர இலவசக் கல்வி கொடுபடவேண்டுமென்றும் வற்புறுத்தியுள்ளது என்பதையும் இச்செய்திமூலம் அறிகின்றோம்.
மேலும் அவ்விழாவுக்குத் தலைமை வகித்துப் பரிசுகளை வழங்கியவரான உள்நாட்டு மந்திரி தமிழரான் அ.மகாதேவா என்பதையும் அறிகின்றோம். மேற்படி செய்திக்கு ஈடாக இரண்டாம் உலக யுத்தம் பற்றிய செய்தி ‘யுத்தம் நடக்கின்றது: இம்பாலில் கடும்போர்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.
அத்துடன் மேற்படி பிரதி கம்பர் ‘நினைவு இத’ழாகவும் வெளியாகியுள்ளது என்பதையும் காண முடிகின்றது. ‘சூர்ப்பணகையின் காதல்’ என்னும் தலைப்பில் தென்மயிலை இ.நமச்சிவாயத்தின் கட்டுரை, இலங்கையர்கோனின் ‘கம்பராமாயணமும் நானும்’என்னும் கட்டுரை, க.செ.யின் ‘அளவான சிரிப்பு’, ‘சோதி’யின் ‘வால்மீகியும் கம்பனும்’, ச.அம்பிகைபாகனின் ‘இரு காதற் காட்சிகள்’, சோம.சரவணபவனின் ‘கம்பச் சக்கரவர்த்தி’, வ.கந்தையாவின் ‘கம்பன் கடவுட்கொள்கை’, மா.பீதாம்பரத்தின் ‘கம்பர் வந்தால்..’, இராஜ அரியரத்தினத்தின் ‘சான்றோர் கவி’, இணுவை வை.அநவரத விநாயகமூர்த்தியின் ‘கம்பன் கவிச்சுவை’, ஆசாமி என்பவரின் ‘தண்டனை’, பண்டிதர் அ.சோமசுந்தர ஐயரின் ‘கம்பர் கண்ட கசிவு’ ஆகிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.