எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் முகநூலில் ‘எனக்குப் பிடித்த சிறுகதை’ என்னும் தலைப்பில் சிறு குறிப்புகள் பதிவிட்டு வருகின்றார். இக்குறிப்புகள் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்வதால் ஆவணச்சிறப்பு மிக்கவை. அவை பதிவுகள் இணைய இதழில் அவ்வப்போது பிரசுரமாகும். – பதிவுகள் –
பிடித்த சிறுகதை – 01
கருத்து வேறுபாடுகளை மறந்து. ஒரு வாசகன் என்ற வகையில் சில எழுத்தாளர்களின் (எனக்குப் பிடித்த) சிறுகதைகளை என் இளம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
” அணி “
ஒரு காலம் முற்போக்கு எழுத்தாளராக இருந்து பின்னர் எதிரணிக்கு தாவி நற்போக்கு எழுத்தாளராக மாறிய எஸ்.பொ. வின் கதை இது. அவரது ‘வீ ‘ தொகுப்பில் இக்கதை அடங்கியுள்ளது. ‘இரத்தம் சிவப்புத்தான் ‘ என்பது போன்ற ஒரு தலைப்பில் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை மலரில் ‘ இக்கதையை முன்புவாசித்திருந்தேன். புதியதொரு கதை சொல்லும் முறையில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சலூன் தொழிலாளியின் வாய் மொழியாக எழுதப்பட்ட இக்கதை இறுதி முத்தாய்ப்பை தவிர்த்து வாசித்தால் மிகச் சிறப்பான கதை என உறுதிப்படுத்துவேன்.!
பிடித்த சிறுகதை – 02
மாகாணசபை வடக்குக் கிழக்கென பிரிபடாத கடைசி வருடம். தமிழ்த் தினவிழா எழுத்தாக்கப் போட்டி நடுவர்களில் நானும் ஒருவன். மாகாணப் போட்டி திருகோணமலையில் நடைபெற்றது. கோட்ட மட்டம், வலய மட்டம், பிரதேச மட்டம், மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவையே மாகாண மட்டப்போட்டிக்கு தேர்வுக்காக வரும். இதில் வெற்றிபெறுவதே அகில இலங்கைப் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும். சிரேஸ்ட பிரிவுக்கானசிறுகதைப் போட்டி,.. எனது பார்வைக்கு வந்த எட்டு மாவட்ட சிறு கதைகளில் ஒன்று இப்படி ஆரம்பித்தது.