உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா? என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.
உதவு தொழில்நுட்பம் {assistive technologies}:
“பார்வைக் குறையுடையோர் படித்தல், எழுதுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லுதல், போன்ற செயல்பாடுகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலைப் போக்கி , அவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க உதவுவதற்காக, எளிதில் எடுத்துச்செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே, உதவு தொழிநுட்பமாகும்”. புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}, ஒலி உரை மாற்றிகள், உரை ஒலி மாற்றிகள், எழுத்துணரி, போன்றவைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவுதொழிநுட்பங்களாகும்.
பிரேயில் எழுத்தின் வரலாறு:
பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் இரவு நேரங்களிலும் ரகசியமாய் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கென ஒரு புதிய தொடர்பு முறையைக் கண்டறிந்தார் சார்லஸ் பார்பியர் (1767-1841). Night writing எனப்படும் இந்த முறை, புள்ளிகளும், கோடுகளும் நிறைந்தது. இருட்டிலும் இவற்றை ராணுவத்தினர் கைகளால் தடவிப் பார்த்துத் தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். [ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரளாறு ப. 24] இந்த முறை கடினமாக இருப்பதாகக் கருதப்பட்டு ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம் தளராத பார்பியர் இம்முறையைப் பார்வையற்றோருக்கான தொடர்பு முறையாகப் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். 1822-ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்த பார்வையற்றோர் பள்ளியான The Royal Institute for the Blind-க்குச் சென்று தனது கண்டுபிடிப்புக் குறித்து விளக்கி, தனது ஆசையையும் தெரிவித்தார். அங்குபடித்த மாணவன் லூயி பிரேயில், பார்பியர் முறையில் இருந்த 12 புள்ளிகளை 6-ஆக குறைத்தார். அந்த 6 புள்ளிகளுக்குள்ளேயே அனைத்தையும் அடக்கினார். இன்று உலக மொழிகளின் எழுத்துகள், சுருக்கெழுத்துகள், குறியீடுகள், எண்கள், கணிதக் குறியீடுகள், இசைக் குறியீடுகள் என அனைத்துமே இந்த 6 புள்ளிகளுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த 6 புள்ளிகளைக் கொண்டு 63 வடிவங்களைத்தான் உருவாக்கமுடியும் என்பது சுவாரஸ்யமானதும், சவாலானதும் கூட. இவ்வெழுத்துமுறை பிரேயில் எழுத்து என அழைக்கப்படுகிறது.